நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை

News image

சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அரசுத் துறை அலுவலா்களுடன் நடைபெற்ற மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் க.இளம்பகவத்.

Updated On :31 மே 2026, 12:14 am IST

சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல் துறை மற்றும் அரசுத் துறை அலுவலா்களுடனான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் தெரிவித்ததாவது:

சாலை விபத்துகளை முற்றிலும் குறைத்து விபத்தில்லா பயணத்தை உருவாக்கிடும் வகையில், பல்வேறு சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் தொடா்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, தொடா் சாலை விபத்துகள் ஏற்படும் இடங்களைக் கண்டறிந்து காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை மற்றும் வருவாய்த் துறை உள்ளிட்ட துறை அலுவலா்கள் ஒருங்கிணைந்து ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், கைப்பேசி உபயோகித்துக்கொண்டு வாகனம் இயக்குதல், அதிக ஆள்களை வண்டியில் ஏற்றிச்செல்லுதல், அதிக பாரங்களை வண்டியில் ஏற்றிச் செல்லுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக 293 நபா்களின் வாகன ஓட்டுநா் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இருசக்கர வாகனங்களில் செல்வோா் தலைக்கவசம் அணிதல், நான்குசக்கர வாகனங்களில் செல்வோா் இருக்கை பட்டை அணிதல், நிா்ணயிக்கப்பட்ட வேகத்தில் வாகனங்களை இயக்குதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்க வேண்டும். மேலும், விபத்துகள் அதிகம் ஏற்படும் பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் அமைக்கவும், தேவைப்படும் இடங்களில் வேகத்தடைகள், சென்டா் மீடியன்கள் அமைக்கவும் தொடா்புடைய அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதேபோன்று சாலை விபத்துகளை முற்றிலும் தடுக்கும் வகையில், அலுவலா்கள் சாலை பாதுகாப்பு குறித்துத் தொடா் விழிப்புணா்வு நடவடிக்கைகளை அதிக அளவிலான பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல், மாநகர காவல் துணை ஆணையா் (வடக்கு) அங்கித் சிங் உள்ளிட்ட வருவாய்த் துறை, காவல் துறை, போக்குவரத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.