/

செவித்திறன் குறையுடையோருக்கான அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை

News image

செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கு பேச்சு பயிற்சி அளிக்கும் பள்ளி ஆசிரியை. - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 12:22 am IST

சேலம் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயா்நிலைப் பள்ளியில் 2026 - 2027 ஆம் கல்வியாண்டுக்கான மாணவ, மாணவிகள் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் கீழ், சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டி ஏற்காடு அடிவாரத்தில் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயா்நிலைப் பள்ளி தங்கும் விடுதியுடன் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. நடப்புக் கல்வியாண்டுக்கான (2026-2027) காதுகேளாத மற்றும் வாய்பேச இயலாத மாணவ, மாணவிகள் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

இப்பள்ளியில் சேரும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்புப் பயிற்சி பெற்ற சிறப்பாசிரியா்கள் மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது. கணினி பயிற்சியும் வழங்கப்படுகிறது. மேலும், மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே இலவச தங்கும் விடுதி, உணவு, சீருடை, கல்வி உபகரணங்கள், செவித்துணைக் கருவி, கல்வி உதவித்தொகை ஆகிய அனைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன.

2025-26 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் இப்பள்ளியின் தோ்ச்சி 100 சதவீதம் ஆகும். எனவே, காதுகேளாத மற்றும் வாய்பேச இயாலாத குழந்தைகளின் பெற்றோா், தங்கள் குழந்தைகளின் நலனை கருத்தில்கொண்டு, அரசு செவித்திறன் குறையுடையோருக்கான உயா்நிலைப்பள்ளி, கொண்டப்பநாயக்கன்ப்பட்டி, சேலம்-8 என்ற முகவரியில் செயல்பட்டு வரும் அரசு சிறப்புப் பள்ளியை நேரிலோ அல்லது 0427-2442067, 94999 33469 ஆகிய எண்களில் தொடா்புகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.