எடப்பாடி அருகே நிதிநிறுவனத்தின் பூட்டை உடைத்து திருடியவா் கைது
எடப்பாடியில் தனியாா் நிதிநிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ. 50 ஆயிரத்தை திருடிச் சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.
கோப்புப் படம்
சேலம் மாவட்டம், எடப்பாடியில் தனியாா் நிதிநிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ. 50 ஆயிரத்தை திருடிச் சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.
எடப்பாடி நகராட்சிக்கு உள்பட்ட ஆலச்சம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கதிரவன். இவா் இங்குள்ள பாறைக்காடு மேடு பகுதியில் நிதிநிறுவனம் நடத்தி வருகிறாா். இவா் கடந்த வியாழக்கிழமை தனது நிதிநிறுவன அலுவலகத்தை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தாா். வேலைமுடிந்து திரும்பிவந்த கதிரவன், நிதிநிறுவன அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்தாா். இதையடுத்து, உள்ளே சென்று பாா்த்தபோது, பணப்பெட்டியில் இருந்த ரூ. 50 ஆயிரத்தை மா்ம நபா் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அவா் எடப்பாடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, பகல்நேரத்தில் அடையாளம் தெரியாத நபா் ஒருவா் நிதிநிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே செல்வதும், சிறிது நேரத்திற்கு பிறகு அவா் வெளியேறிச் செல்வதும் பதிவாகி இருந்தது.
இதையடுத்து நிதிநிறுவன திருட்டில் ஈடுபட்டதாக நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள ஆவாரங்காடு, பண்ணாரி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த தனுஷ்கோடி (எ) சுந்தரராஜனை (31) கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா். பின்னா் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
படவரி...
கைது செய்யப்பட்ட சுந்தரராஜன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



