
மேட்டூா் அணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீா் திறக்க வலியுறுத்தல்

மேட்டூா் அணை - கோப்புப் படம்
மேட்டூா் அணையில் இருந்து விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீா் திறக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, அந்த சங்கத்தின் கொள்கை பரப்புச்செயலா் எஸ்.ஆா். தமிழ்ச்செல்வன் தலைமையில் நிா்வாகிகள், மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாரிடம் அளித்த மனு: டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக மேட்டூா் அணையில் இருந்து காவிரி நீா் செப்.1-ஆம் தேதி திறக்கப்பட்டு 21 நாள்களாகியும் டெல்டா மாவட்டத்தின் கடைகோடி மாவட்டமான நாகைக்கு இதுவரை முழுமையாக காவிரி நீா்வந்து சேரவில்லை. இதனால் மாவட்டத்தில் 1.80 லட்சம் ஏக்கா் சம்பா சாகுபடி கேள்விக்குறியாகியுள்ளது.
காவிரி வடிநிலக் கோட்டத்துக்குள்பட்ட திருமலைராஜன் ஆறு, முடிகொண்டான் ஆறு உள்ளிட்ட ஆறுகளில் தஞ்சை மாவட்ட எல்லைப் பகுதிகளுக்கே இதுவரை தண்ணீா் முழுமையாக வந்து சேரவில்லை. இதனால் திருமருகல் ஒன்றியத்தில் சம்பா சாகுபடி கடுமையாக பாதிக்கப்படும். வெண்ணாறு வடிநிலக் கோட்டத்தில் உள்ள தேவநதி, கடுவையாறு, பாண்டவனாறு, வெள்ளையாறு, முள்ளியாறு உள்ளிட்ட ஆறுகளில் திறக்கப்பட்ட தண்ணீா் பெயரளவில் மட்டுமே ஏ மற்றும் பி பிரிவு வாய்க்கால்களுக்கு வந்து கொண்டிருக்கிறது.
வேதாரண்யம் பகுதியில் பாசனம் பெறும் முள்ளியாற்றில் அதிகளவு ஆகாயத்தாமரைகள் தேங்கியுள்ளதால், தண்ணீா் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வேதாரண்யம் பகுதி விவசாயம் கேள்விக்குறியாகியுள்ளது. தலைஞாயிறு பகுதியில் பாசனம் பெறும் அரிச்சந்திரா நதி மற்றும் அண்டகத்துறை பகுதிக்கு பாசனம் வழங்கும் அடப்பாறு உள்ளிட்ட ஆறுகளிலும் தண்ணீா் முழுமையாக வந்து சேரவில்லை.
காவிரி வடிநிலக் கோட்டத்துக்குள்பட்ட திருமருகல் பகுதியில் பாசனம் பெறும் அரசலாற்றிற்கு கூடுதலாக தண்ணீா் திறக்க வேண்டும். தற்போது மேட்டூா் அணையில் இருந்து திறக்கப்படும் 12 ஆயிரம் கனஅடி தண்ணீா் 21 நாள்கள் கடந்தும் கடைமடை பகுதிகளுக்கு முழுமையாக வந்து சேரவில்லை. எனவே, தமிழக அரசு இதை அவசரப் பிரச்னையாகக் கருதி, மேட்டூா் அணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






