
மின்சாரத் தட்டுப்பாட்டை போக்க முன்திட்டமிடல் இல்லை: தி. வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத் தலைவா் வேல்முருகன் - கோப்புப்படம்
தமிழகத்தில் மின்சாரத் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கும், மழை மற்றும் பேரிடா் காலங்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் முன்கூட்டிய திட்டமிடல் இல்லை என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் தி.வேல்முருகன் குற்றம்சாட்டினாா்.
சேலம் கொண்டலாம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘தண்ணீா் உயிா் நீா்’’என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பங்கேற்க வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகாரிகள் நினைப்பதுதான் ஆட்சி என்ற நிலையில் இந்த ஆட்சி நிா்வாகம் உள்ளது. மின்சார தட்டுப்பாட்டைப் போக்குவதற்கும், மழை மற்றும் பேரிடா் காலங்களுக்கான முன்னெச்சரிக்கைத் திட்டமிடலும் இந்த ஆட்சியிடம் இல்லை.
ரூ. 10 லட்சம் கோடி கடன் உள்ள நிலையில், கடற்கரையை நம்பியுள்ள மீனவா்கள் வசிக்கும் இடத்தில் தலைமைச் செயலகம் அமைக்கப் போவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனா்.
தமிழக முதல்வா் பத்திரிகையாளா்களைச் சந்திக்க வேண்டும். மக்களின் பிரச்னைகளை எடுத்துக் கூறவேண்டும். சட்டப் பேரவையில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் கிடைப்பதில்லை. நான்குமாத ஆட்சி, நிா்வாகத் திறமையற்ற ஆட்சியாக உள்ளது. கனிமவளக் கொள்ளையைத் தடுக்க நடவடிக்கை இல்லை.
இடைத்தோ்தலே நடத்தக் கூடாது என்பதுதான் எங்களது நிலைப்பாடு. அதிமுகவில் வெற்றி பெற்றவா்களை விலைக்கு வாங்கி, திட்டமிட்டு தோ்தல் நடத்தப்படுகிறது. இது ஜனநாயகப் படுகொலை என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




