குடிசை மேம்பாட்டுத் திட்டப் பணி: மானியம் கிடைக்குமா?
போடி, அக். 13: போடியில் குடிசை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வீடு கட்ட ஒதுக்கப்பட்ட மானியத் தொகையை வழங்கத் தாமதம் ஏற்படுவதால், வீடுகள் கட்டுமானப் பணி பாதிக்கப்பட்டுள்ளது. போடி நகராட்சியில் 33 வார்


போடி, அக். 13: போடியில் குடிசை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வீடு கட்ட ஒதுக்கப்பட்ட மானியத் தொகையை வழங்கத் தாமதம் ஏற்படுவதால், வீடுகள் கட்டுமானப் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
போடி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நகராட்சி விரிவாக்கப் பகுதியில் உள்ள வார்டுகள், நகருக்குள் குடிசை வீடுகள் அதிகம் உள்ள வார்டுகள் ஆகியவற்றைத் தேர்வு செய்து, இந்த வார்டுகளில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மத்திய அரசின் உதவியுடன் குடிசை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வீடு கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, நகராட்சிப் பகுதியில் 326 வீடுகள் கட்ட பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். பிப்ரவரியில் பணி ஆணை வழங்கப்பட்டது. ஒரு பயனாளிக்கு வீடு கட்ட மதிப்பு ரூ. 1 லட்சத்து 7 ஆயிரம். இதில் அரசு மானியம் ரூ. 72 ஆயிரம். ரூ. 8 ஆயிரம் டெபாசிட் தொகை. இந்த 80 ஆயிரம் ரூபாய் போக மீதித் தொகையை பயனாளி வழங்க வேண்டும். இந்தத் தொகையும் பின்னாளில் கடனாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டது.
மானியத் தொகை வழங்கத் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு வீடு கட்ட மானியத் தொகை 4 கட்டங்களாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, அடித்தளம் வரையில் கட்டடம் முடிந்தவுடன் முதல் தவணைத் தொகை வழங்கப்படும். சென்டிரிங் நிலை வரை 2-வது தவணைத் தொகை வழங்கப்படும். அதற்கு மேல் முடித்தவர்களுக்கு 3-வது தவணைத் தொகையும், பூச்சு மற்றும் வர்ணம் பூச்சு உள்ளிட்ட வீடு முழுமை பெற்ற பின் 4-வது தவணைத் தொகை வழங்கப்படும் என உத்தரவில் கூறப்பட்டது.
மேலும் 3 மாதங்களில் வீடு கட்டி முடிக்க வேண்டும். வீடு கட்டும் பணியை தங்கள் சொந்தப் பொறுப்பிலேயே பொறியாளர்கள் வைத்தும் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி, 326 பயனாளிகள் தங்கள் குடிசை, மண் மற்றும் தகர வீடுகளை இடித்து, கடன் பெற்றும், தங்கள் குழந்தைகளின் திருமணம் உள்பட எதிர்காலத் தேவைக்காக வைத்திருந்த நகைகளை அடகு வைத்தும் அடித்தளம் வரையிலும், சென்டிரிங் வரையிலும் வீடுகளைக் கட்டி முடித்தனர்.
ஆனால், நகராட்சியின் உத்தரவில் தெரிவித்தபடி, மானியத் தொகை வழங்கப்படவில்லை. அரசு நிதி கிடைக்காததால் மானியம் வழங்கத் தாமதம் ஏற்படுவதாகத் தெரிவித்தனர். இதனால் பிப்ரவரி மாதம் கட்டத் தொடங்கிய வீடுகள் 7 மாதங்கள் ஆன நிலையிலும் சென்டிரிங் நிலையிலேயே உள்ளன.
இதுகுறித்து பயனாளிகள் சிலர் தெரிவித்தபோது, பலருக்கு முதல் கட்டத் தவணைத் தொகை வழங்கியதோடு சரி. அதற்குப் பிறகு எந்த மானியமும் வழங்கப்படவில்லை.
இதனால் குடியிருந்த குடிசை வீடுகளையும் இடித்துவிட்டு தற்போது சாலைகளில் தூங்குகிறோம்.
அரசு மானியம் வந்து விட்டதாகத் தகவல் கிடைத்து நகராட்சி அலுவலகத்தில் விசாரித்தபோது, ஆணையாளர் பணியிடம் காலியாக உள்ளதால் பொறுப்பு ஆணையாளர் வரவில்லை என்றும், மேலாளர் விடுப்பு என்றும் கூறி அலைய வைக்கின்றனர். இதில் பலர் மானியமே வேண்டாம் என நினைத்து தாங்களே கடன் பெற்று வீடுகளை கட்டி முடித்துவிட்டனர் என்றனர்.
இதுகுறித்து நகராட்சியில் விசாரிக்கச் சென்றபோது, நகராட்சி ஆணையாளராக இருந்த மாணிக்கவாசகம் என்பவர் மாறுதலில் சென்று சில மாதங்கள் ஆகியும் புதிய ஆணையாளரை நியமனம் செய்யவில்லை என்றும், கம்பம் நகராட்சி ஆணையாளரே போடி நகராட்சிக்கும் பொறுப்பு வகிப்பதால் பணிகள் தாமதமாவதாகவும் தெரிவித்தனர்.
போடி நகராட்சிக்குப் புதிய ஆணையரை நியமித்து, குடிசை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவோருக்கு உரிய தவணை, மானியத் தொகைகளை உடனே வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஏழை மக்களின் கோரிக்கையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...