நாகநாதசுவாமி கோயில் சுற்றுலாத் தலமாக்கப்படுமா?
பரமக்குடி, அக். 19: பரமக்குடி அருகே உள்ள நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலை, சுற்றுலாத் தலமாக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். பக்தர்கள் வழிபட்டால் குழந்தைப் பாக்கியம் அளிக்கக் கூடியதும்


பரமக்குடி, அக். 19: பரமக்குடி அருகே உள்ள நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலை, சுற்றுலாத் தலமாக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பக்தர்கள் வழிபட்டால் குழந்தைப் பாக்கியம் அளிக்கக் கூடியதும், சர்வ மதத்தினரும் வழிபடக் கூடியதுமான இத் தலம், தென் தமிழ்நாட்டில் ராமநாதபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த பழமையான கோயிலாகும்.
ராமநாதபுரத்தில் இருந்து 16 கி.மீ. தூரத்திலும், பரமக்குடியில் இருந்து 8 கி.மீ. தூரத்திலும் இக் கோயில் அமைந்துள்ளது.
இக் கோயிலில் எழுந்தருளியுள்ள சுவாமியை ஸ்ரீநாகநாதர், நாகலிங்கம், நயினார் என்றும், அம்மனை செüந்தரநாயகி, அழகிய நாயகி எனவும் பக்தர்கள் அழைக்கின்றனர்.
இத் தலத்தில் நாகலிங்கப் பெருமாள் சன்னதி மேற்கு முகமாக இருக்கிறது.
இது நாமதேவர் கீதம் கேட்க சுவாமி, மேற்கு முகம் திரும்பி இருப்பதாகக் கூறப்படுகிறது.
இத் தலத்துக்கு, ஏனைய சிவன் கோயில்களில் இல்லாத சிறப்பு ஒன்று உள்ளது.
தென்னகத்தில் இஸ்லாமியர் ஆதிக்கம் உச்சத்தில் இருந்தபோது, முல்லாசாகிப் தனது வாய் பேச முடியாத பெண்ணோடு சன்னதி முன் நின்றாராம். அப்போது அப் பெண் நயினார் ஆண்டவர் எனப் பேசியதாகவும், முல்லா பெருமானை "நீரே நயினார் நிசந்தெரிந்தேன்' என்று போற்றி புகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
அன்றுமுதல் நாகநாதர் கோயில் நயினார்கோவில் என அழைக்கப்படுகிறது.
இந்த மகத்துவத்தை உணர்ந்த இஸ்லாமியர்கள் இத் தலத்துக்கு வந்து காணிக்கை செலுத்தி வழிபட்டுச் செல்கின்றனர்.
இங்கு சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சங்கிலித் தொடர் வரலாற்றுச் சின்னம் அமைந்துள்ளது.
மேலும், இக் கோயிலில் உள்ள இளவட்டக்கல் அக் கால ஆண்களின் வீரத்தைக் காட்டும் அளவில் உள்ளது.
இக் கோயிலின் மூலஸ்தானத்துக்குப் பின்புறம் உட்பிரகாரத்தில் புத்தடி இருக்கிறது.
இதில், மருத மரத்தடியில் நாகலிங்கப் பெருமாள் நாகரூபமாயிருந்து காட்சி அளித்ததாகவும், இங்கு பிரார்த்தனை செய்யும் பக்தர்கள் கோழி முட்டைகளை புத்தடியில் வைத்து, உண்டியல் போட்டு அந்த மண்ணை எடுத்து நீரில் கரைத்து உண்டும், நோயிடங்களில் பூசினாலும் நோய் தீர்ந்து விடுவதாகக் கூறுகின்றனர்.
ஆலயத்தில் ஸ்ரீசெüந்தரநாயகியம்மன் பள்ளியறைக்கெதிரில், அர்த்த மண்டபத்திலிருந்து, ராமநாதபுரம் அரண்மனைக்குச் செல்ல ரகசிய சுரங்கப் பாதை அமைக்கப்பட்டிருக்கிறது.
இதற்குள், ஒரு மண்டபமும் நீர் நிறைந்த தடாகமும் உள்ளன. அந் நீரைப் பருகினால் சகல நோயும் குணமடைவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
கோயில் முன் அமைந்துள்ள குளத்தில் நீராடினால் உடம்பில் ஏற்பட்ட அரும்புகள் அகன்று விடுவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இத் தலப் பெருமானை வேண்டினால், குழந்தைப்பேறு உண்டாகும் என்பது ஐதீகம்.
இக் கோயிலில், மூன்று முக்கியத் திருவிழாக்களான வைகாசி பிரம்மோற்சவம் 10 நாள்களும், ஆடிப்பூர அம்மன் உற்சவம் 13 நாள்களும், தைப்பூசத் தீர்த்த திருவிழா ஒருநாள் நடைபெறும்.
திருவிழாக் காலங்களில், இத் தலத்துக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து நேர்த்திக் கடன் செலுத்துவர்.
சுவாமிக்கு பெரிய வைரத் தேரும், அம்மனுக்கு ரதமும் அமைக்கப்பட்டு, விசேஷ நாள்களில் வீதிஉலா உற்சவம் நடைபெறும்.
இத்தகைய சிறப்புவாய்ந்த இக்கோயிலை, வட மாநிலத்தவரும் வந்து செல்லும் அளவுக்கு சிறந்த சுற்றுலாத் தலமாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து ஒன்றியக் குழுத் தலைவர் சுப.த. திவாகரன் கூறுகையில், நாகநாதசுவாமி கோயிலை சுற்றுலாத் தலமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...