பரமக்குடி: விபத்து, அவசர சிகிச்சைப் பிரிவு நவீனப்படுத்தப்படுமா?

பரமக்குடி, அக். 26:  பரமக்குடி அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு பெயரளவில் செயல்படுவதால், சாலை விபத்துகளில் சிக்கி படுகாயமடைந்தோரைக் காப்பாற்ற முடியாமல் உயிரிழப்புகள் அதிகரிப

பரமக்குடி, அக். 26:  பரமக்குடி அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு பெயரளவில் செயல்படுவதால், சாலை விபத்துகளில் சிக்கி படுகாயமடைந்தோரைக் காப்பாற்ற முடியாமல் உயிரிழப்புகள் அதிகரிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

  இந்தியாவின் பல்வேறு மாநில பக்தர்கள் வரும் புண்ணியத் தலம் ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயில். இங்கு சென்றுவர கூடுதல் ரயில் வசதிகள் இன்றி, பெரும்பாலான மக்கள் மதுரையில் இருந்து, ராமேசுவரத்துக்கு சுற்றுலா வாகனங்கள் மற்றும் பஸ்களில் செல்கின்றனர்.

  இந்த வாகனங்கள், பரமக்குடி வழியாகச் செல்லும் மதுரை- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் செல்கின்றன.

  பரமக்குடியைச் சுற்றியுள்ள கிராமத்தினரும் இவ் வழியாகச் செல்வதால், இச் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

  20 மீட்டர் அகலத்துடன் இருக்க வேண்டிய தேசிய நெடுஞ்சாலை, ஆக்கிரமிப்பாளர்களால் குறுகி, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

  பெரும்பாலான ஓட்டுநர்கள் மது அருந்திச் செல்வதாலும் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன.

  இப் பகுதியில் விபத்துகளில் சிக்குபவர்களைக் காப்பாற்றும் நோக்கில், 1999-ம் ஆண்டு, பரமக்குடி அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டது.

  இப் பிரிவு, தற்போது போதிய மருத்துவர்கள் இல்லாததால் பெயரளவில் செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

  விபத்துகளில் தலைக் காயமடைந்தவர்களைத் தவிர்த்து, எலும்பு முறிவு ஏற்படுபவர்களைக்கூட, மதுரைக்கு அனுப்பி வைப்பதாக பொதுமக்கள் புகார் கூறினர்.

  விபத்துகளில் சிக்குபவர்களைக் காப்பாற்ற 108 ஆம்புலன்ஸ் மற்றும் விபத்துமீட்புச் சங்கம், தமுமுகவினர், தங்களது ஆம்புலன்சுகளில் விபத்து நடந்த இடத்துக்குச் சென்று மீட்டு வருகின்றனர்.

  ஆனால், இவ்வாறு படுகாயமடைந்து கொண்டு வரப்படுவோர், சுமார் 1 மணி முதல் 2 மணி நேரம் வரை உயிருக்குப் போராடி உயிரிழக்கின்றனர்.

  இதனைப் போக்க, விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதிகளில், மத்திய அரசால் நிறுவப்பட உள்ள ட்ராமா சென்டர் திட்டத்தை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  சி.டி. ஸ்கேன் வசதியுடன், போதிய மருத்துவர்களை பரமக்குடி அரசு மருத்துவமனையில் பணி அமர்த்தினால், விபத்துகளில் படுகாயமடைந்து வருவோரைக் காப்பாற்றலாம் என பொதுநல அமைப்பினர் தெரிவித்தனர்.

  இதுகுறித்து, பரமக்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஹேமமாலினி கூறியது:

  இங்கு செயல்படும், விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு 12 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது.

  தினசரி இரண்டுக்கும் மேற்பட்ட விபத்துகளில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  பெரிய அளவில் தலைக் காயமடைந்தவர்களை உடனடியாக, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com