/

சுகாதாரமற்ற இறைச்சிக் கடைகளுக்கு தடை விதிக்கப்படுமா?

போடி, ஏப். 6: போடி பகுதியில் சுகாதாரமற்ற முறையில் நடத்தப்படும் இறைச்சிக் கடைகளுக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். போடி நகராட்சி, கிராமப் பகுதிகளில் ஆட்டிறைச்சி, கோழி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:10 am

எஸ்.​ வெங்கடாசலம்

போடி, ஏப். 6: போடி பகுதியில் சுகாதாரமற்ற முறையில் நடத்தப்படும் இறைச்சிக் கடைகளுக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

போடி நகராட்சி, கிராமப் பகுதிகளில் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, மீன் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. போடி நகரில் 40-க்கும் மேற்பட்ட இறைச்சிக்  கடைகள் உள்ளன. இதேபோல் 100-க்கும் மேற்பட்ட கோழி இறைச்சிக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. போடி பூ மார்கெட் பகுதி, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதியில் மீன் கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இறைச்சிக் கடைகளில் சுகாதாரமான ஆடு, கோழிகளை அறுத்து விற்க வேண்டும் என்றும், ஆட்டிறைச்சியை நகராட்சி சீல் வைத்து விற்க வேண்டும் என்பதும் விதி. ஆனால் தற்போது பல இடங்களில் ஆட்டிறைச்சிக் கடைகள் விதிமுறைகளுக்கு முரணாக நடத்தப்பட்டு வருகின்றன. ரோட்டிலேயே ஆடுகளை வெட்டி விற்கின்றனர். இதனால் பஸ் உள்ளிட்ட வாகனங்களின் தூசி, ஆட்டிறைச்சிகள் மேல் படிந்து நோய் பரவும் நிலை உள்ளது.

பல கோழி இறைச்சிக் கடைகள் சுகாதாரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளன. சிறிய பெட்டிக் கடைகளில் கூட கோழிகளை வெட்டி விற்பனை செய்கின்றனர். மீன்களையும்  ரோட்டில் வைத்து விற்கின்றனர். இதில் தூசி படிந்தும், ஈக்கள் மொய்த்தும் காணப்படுகின்றன. இதனால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு, பொதுமக்கள் பாதிக்கும் நிலை உள்ளது.

நகராட்சிப் பகுதியில் இறைச்சியை கடை போன்ற அமைப்பிற்குள் வைத்து மட்டுமே  விற்கவேண்டும் என்று நகராட்சி அறிவித்துள்ளது. நகராட்சி கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தியதன் காரணமாக சிலர் நகராட்சி எல்லைப் பகுதிகளில் கிராம எல்லைகளில் கடை வைத்து விற்கின்றனர்.

மேலும் சிலர் ஓர் ஆட்டுக்கு மட்டும் சீல் வைத்து பெற்றுக்கொண்டு பல ஆடுகளை வெட்டி விற்கின்றனர்.

இவற்றைத் தடுக்க போடி நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சிகளை ஒரே இடத்தில் சுகாதாரமான வளாகம் அமைத்து அங்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து போடி நகராட்சி ஆணையர் க.சரவணக்குமார் கூறியதாவது:

போடி நகராட்சியில் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ரோடுகளில் கடை வைத்து இறைச்சி விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் தற்போது கட்டப்பட்டுள்ள நவீன ஆடு அடிக்கும் கூடம் பகுதியில் இறைச்சிக்  கடைகள் கட்டப்பட உள்ளன.

இதில் சுகாதாரமான முறையில் ஆட்டிறைச்சி, மீன்  விற்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.