/

அடிப்படை வசதிகளின்றி போடி அம்மாபட்டி கிராமம்

போடி, டிச. 13: போடி அம்மாபட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் கிராம மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். போடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது போடி அம்மாபட்டி கிராமம். இங்கு, 2 ஆயிரத்துக்க

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 9:26 am

எஸ்.​ வெங்கடாசலம்

போடி, டிச. 13: போடி அம்மாபட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் கிராம மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

போடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது போடி அம்மாபட்டி கிராமம். இங்கு, 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இக்கிராம மக்களில் பெரும்பாலோர் விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள்.

இங்கு, ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனியாக கழிப்பிட வசதி இல்லை. ஏற்கெனவே, கிராமப் பொதுக் கோயில் முன்பாக கட்டப்பட்ட கழிப்பிடம் பயன்பாடற்ற நிலையில் சேதமடைந்துள்ளது.

இதனால், சாலை ஓரங்கள் திறந்தவெளி கழிப்பிடமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, சுகாதாரக்கேடு நிலவி வருகிறது.

மேலும், இங்கு குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி கிடக்கின்றன. சாக்கடைகள் தூர்வாரப்படாமல் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. சமீபத்தில் பெய்த மழையினால், சாக்கடைக் கழிவுநீர் சாலைகளிலேயே தேங்கியுள்ளன.

அம்மாபட்டி கிராமத்திலிருந்து பெருமாள்கவுண்டன்பட்டி, டொம்புச்சேரி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் சுற்றுச்சாலையில் புதர் செடிகள் வளர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன. வாகனங்கள் அனைத்தும் கிராமத்துக்குள் சென்று வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர்த் தொட்டிகள் பராமரிக்கப்படாமல் உள்ளன. இதனால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. பெருமாள் கவுண்டன்பட்டிக்குச் செல்லும் சாலையில் உள்ள தண்ணீர் தொட்டிக்கான மின் இணைப்பு இருந்தும், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் குடங்களைத்  தூக்கிக்கொண்டு தண்ணீருக்காக அலையும் அவலம் ஏற்பட்டுள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சாலை என்பதால், குண்டும் குழியுமாகக் காணப்படுகின்றன. மேலும், சமீபத்தில் பெய்த மழைக்கு சாலைகள் மிகவும் சேதமடைந்து, போக்குவரத்துக்கு பெரிதும் இடையூறாக உள்ளது. சாலைகளில் மழை நீர் தேங்கியிருப்பதால், கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகக் காணப்படுகிறது.

அம்மாபட்டி காலனியில் பலருக்கு பட்டா வழங்கப்பட்டும், சாலை வசதி, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், பெரும்பான்மையோர் வீடுகளைக் கட்ட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, அம்மாபட்டி கிராமத்துக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.