திருவாரூர், ஜூலை 22: தமிழகம் முழுவதும் அயோடின் சத்து இல்லாத உப்பு விற்பனை நடைபெறுவதாக நுகர்வோர் அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன.
உப்பில் உள்ள அயோடின் மனித உடல், மூளை ஆகியவற்றின் இயல்பான வளர்ச்சிக்கும், செயல்பாடுகளுக்கும் அவசியமானது. இந்தச் சத்து குழந்தைப் பருவம், பெண்கள் பூப்படையும் பருவம், கர்ப்பக் காலம், தாய்ப் பாலூட்டும் காலங்களில் மிகவும் தேவையான ஒன்று. அயோடின் பற்றாக்குறையால் கருச் சிதைவு, குறைப் பிரசவம், சிசு மரணம், முன் கழுத்துக் கழலை, மன வளர்ச்சிக் குறைவு, தடைப்பட்ட உடல் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.
இதை உணர்ந்த மத்திய அரசு, தேசிய அயோடின் பற்றாக்குறைக் குறைபாடுகள் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் மூலம் உணவுக்குப் பயன்படுத்தப்படும் உப்பில் அயோடின் கலந்து விற்பனை செய்யும் நடைமுறையைக் கொண்டு வந்தது. இதன்மூலம், அயோடின் இல்லாத உப்பு விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது.
ஆனால், அயோடின் சத்து இல்லாத உப்புப் பொட்டலங்களில், அயோடின் கலந்த உப்பு என்று அச்சடித்துவிட்டு மோசடியாக உப்பை விற்பனை செய்து வருவதாக நுகர்வோர் அமைப்பினர் புகார் கூறுகின்றனர்.
தயாரிப்பு நிலையில் உப்பில் 30 பி.பி.எம். அளவு அயோடின் சத்து இருக்க வேண்டும். ஆனால், நாகை மாவட்டத்துக்குள்பட்ட வேதாரண்யம் பகுதியில் உள்ள உப்பு தயாரிக்கும் பகுதியில் நுகர்வோர் அமைப்பினர் இரு மாதங்களுக்கு ஒரு முறை என்று 6 உப்பு மாதிரிகளை எடுத்து, உப்புத் துறை ஆய்வுக் கூடத்தில் சோதனை செய்ததில், ஓர் உப்பு மாதிரியில் மட்டுமே 27 பி.பி.எம். அயோடின் இருந்ததும், மற்ற 5 மாதிரிகளில் 10 பி.பி.எம்.-க்கும் குறைவாகவே அயோடின் இருந்ததும் தெரிய வந்தது.
மேலும், 2008-09 ஆம் ஆண்டில் வேதாரண்யம் பகுதியில் உப்புத் துறை மூலம் எடுக்கப்பட்ட 949 உப்பு மாதிரிகளில் 554 மாதிரிகளிலும், 2009-2010 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட 951 உப்பு மாதிரிகளில் 298 மாதிரிகளிலும், இதே ஆண்டில் மரக்காணம் பகுதியில் எடுக்கப்பட்ட 590 உப்பு மாதிரிகளில் 234-லிலும், தூத்துக்குடியில் எடுக்கப்பட்ட 6,077 உப்பு மாதிரிகளில் 1,037-லிலும் அயோடின் சத்து 30 பி.பி.எம்.-க்கு குறைவாக இருந்தது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலிலிருந்து தெரிய வந்தது.
இதுதொடர்பாக அயோடின் குறித்த ஆய்வை இரு ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் பிறை. அறிவழகன் கூறியது:
தயாரிப்பு நிலையில் உப்பில் அயோடின் கலப்பு முறையாக இல்லை. தவிர, திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள 432 கடைகளில் நுகர்வோர் ஆர்வலர்கள் மூலம் எம்.பி.ஐ. சோதனைக் கரைசலைக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில் 356 கடைகளில் அயோடின் இல்லாத உப்பு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது.
இந்த ஆய்வில் 44 வகையான உப்பு மாதிரிகள் (வெவ்வேறு தயாரிப்பு நிறுவனங்கள்) கிடைத்தன. இவை தூத்துக்குடி (28 உப்பு உற்பத்தி நிறுவனங்கள்), வேதாரண்யம் (14), மரக்காணம் (2) பகுதிகளைச் சேர்ந்த நிறுவனங்களின் தயாரிப்புகள் ஆகும்.
உணவு கலப்படத் தடுப்புச் சட்டத்தின்படி உணவுக்காக விற்பனை செய்யப்படும் உப்பு 15 பி.பி.எம்.-க்கு குறையக் கூடாது. ஆனால், மேற்காணும் 44 நிறுவன உப்புகளில் 23 நிறுவனங்களின் உப்பில் 15 பி.பி.எம்-க்கும் குறைவாகவே அயோடின் இருந்தது. 12 நிறுவன உப்பில் 15 முதல் 30 பி.பி.எம். அளவிலும், 9 நிறுவன உப்பில் 30 பி.பி.எம்-க்கு அதிகமாகவும் அயோடின் இருந்தது கண்டறியப்பட்டது.
உப்பு உற்பத்தி செய்யும் இடத்திலேயே போதுமான அயோடின் கலப்பதில்லை என்பது எங்களது ஆய்வின் மூலம் தெரிய வந்தது. இதை உப்புத் துறையிலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலும் உறுதிப்படுத்துகிறது.
உப்பு தயாரிப்புப் பகுதியில் உப்புத் துறை மூலம் மாதிரிகள் எடுத்து ஆய்வுக் கூடத்தில் அயோடின் அளவைக் கண்டறியும் சோதனை என்பது தற்போது சடங்குக்காகவே நடத்தப்படுகிறது. இது சோதனை அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஆய்வுதான் என்றாலும், தமிழகம் முழுவதும் இதே நிலைதான் என்றார் அவர்.
எனவே, உப்பு தயாரிக்கும் இடத்திலேயே அயோடின் முறையாகக் கலக்கப்படுகிறதா என்பதை சுகாதாரத் துறையும், உப்புத் துறையும் கண்காணித்து, உறுதி செய்ய வேண்டும். உப்பு தயாரிப்பு நிறுவனங்களுக்குத் தேவைப்படும் கூடுதல் அயோடின் தூளை அரசு இலவசமாகவோ அல்லது மானிய விலையிலோ வழங்க வேண்டும்.
தூத்துக்குடி, வேதாரண்யம், மரக்காணம் பகுதிகளில் அயோடின் உப்பு தயாரிப்பதை முறையாக்கினாலே அயோடின் பற்றாக்குறையில்லாத தமிழகத்தை உருவாக்க முடியும். எனவே, இப் பகுதிகளில் கண்காணிப்புக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும். போலியான முகவரியிட்டு தயாரிக்கப்படும் உப்பை தொழிலாளர் துறை ஆய்வு மேற்கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே நுகர்வோர் அமைப்புகளின் கோரிக்கை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியீடு: கோவை மாவட்ட 10 தொகுதிகளில் 183 போ் போட்டி

தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை என முதல்வா் கூறுவது பொய்: கே.அண்ணாமலை

குடிநீா் வழங்கக் கோரி கூடலூா் நகராட்சி அலுவலகம் முற்றுகை

அதிமுகவின் சாதனை திட்டங்கள் தொடர வாக்களியுங்கள்: கே.சி.கருப்பணன்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

