ராமநாதபுரம், ஜூலை 26: ராமநாதபுரம் அருகே வழுதூரில் செயல்பட்டுவந்த இரு இயற்கை எரிவாயு சுழலி மின்நிலையங்களும், கடந்த சில மாதங்களாக இயந்திரக் கோளாறு காரணமாக செயல்படாமல் இருப்பதால், அரசு நிதி ரூ. 600 கோடிக்கு மேல் வீணாகிக் கொண்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை ஊராட்சிக்கு உள்பட்ட வழுதூரில் 42 ஏக்கர் பரப்பளவில், இரு இயற்கை எரிவாயு சுழலி மின்நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஒரே இடத்தில் செயல்பட்டு வரும் இவ்விரு மின் உற்பத்தி நிலையங்களும் தற்போது இயந்திரக் கோளாறு காரணமாக செயல்பாடின்றி உள்ளன.
இதில், முதலாவது மின் உற்பத்தி நிலையம் 2000-ல் ரூ. 400 கோடி மதிப்பில் மின்துறை அமைச்சர் ஆர்காடு வீராசாமியால் அடிக்கல் நாட்டப்பட்டு, 2004-ல் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டு, மின் உற்பத்திப் பணிகள் தொடங்கின.
இந்நிலையத்தின் மூலம், தினசரி 95.2 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
அதே மின் உற்பத்தி நிலைய வளாகத்துக்குள், கூடுதலாக ஓர் மின்நிலையம் 2006-ல் மின்துறை அமைச்சர் ஆர்காடு வீராசாமியால் அடிக்கல் நாட்டப்பட்டு 2008-ல் அவராலேயே திறந்து வைக்கப்பட்டது.
இம்மின் நிலையமும் தினசரி 92.3 மெகாவாட் மின் உற்பத்தியை செய்து வந்தது.
முதலாவது மின்உற்பத்தி நிலையம் இந்தியாவிலேயே மிக அதிக மின்உற்பத்தி செய்துள்ளது என அறிந்த மத்திய அரசு, இந்நிறுவனத்துக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளது.
இந்த மின் நிலையங்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் துணை மின் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு மின்விநியோகம் ஓரளவு சீராக இயங்க இவ்விரு நிறுவனங்களும் பெரிதும் துணை புரிந்து வந்தன.
முதலாவதாக துவங்கப்பட்ட மின் நிலையத்தின் இயந்திரங்கள் அனைத்தும் தரமானதாகவும், 2-வதாக துவக்கப்பட்ட மின்நிலையத்தில் தரமற்ற இயந்திரங்கள் பொருத்தப்பட்டு செயல்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
ஏனெனில் 2-வது மின்நிலையம் உற்பத்தியைத் தொடங்கிய 4 மாதங்களிலேயே சிறுசிறு இயந்திரக் கோளாறுகள் ஏற்பட்டு சரிபார்க்கப்பட்டுக் கொண்டே வந்த நிலையில், இப்போது எரிவாயுவைத் தயாரித்து மின்சாரம் தயாரிக்கும் டர்பைன் இயந்திரம் முழுவதுமாக பழுதடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், கடந்த 8 மாதங்களாக மின்நிலையம் செயல்படாமல் உள்ளது.
இந்நிலையில் முதலாவது மின் நிலையமும் கடந்த 3 மாதமாக இயந்திரக்கோளாறு காரணமாக செயல்படாமல் உள்ளது.
இரண்டிலும் உள்ள இயந்திரப் பழுதுகளை நீக்கி பயன்பாட்டுக்கு கொண்டுவர பல கோடி ரூபாய் செலவாகும் எனவும் தெரிய வருகிறது.
இவ்விரு மின்நிலையங்களிலும் ஒப்பந்தத் தொழிலாளர்களாக 89 பேர் பணி செய்து வந்தனர்.
இவர்கள் அனைவரும் விரைவில் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என மின்உற்பத்திப் பணிகள் துவக்க விழாவின்போது மேடையிலேயே மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராச்சாமி அறிவித்தார். ஆனால், இதுவரை யாரும் பணிநிரந்தரம் செய்யப்படவில்லை. ஒப்பந்தத் தொழிலாளர்களும் பல்வேறு போராட்டங்களையும் நடத்திவிட்டு கோரிக்கை நிறைவேறாத விரக்தியில் உள்ளனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வாலாந்தரவை கிளைச் செயலாளர் செல்வம் கூறியதாவது..
முதல் மின்நிலையம் 3 மாதமாகவும் 2-வது மின்நிலையம் 8 மாதமாகவும் செயல்படாமல் உள்ளன.
மொத்தத்தில் இரண்டு மின் நிலையங்களும் ரூ. 600 கோடி செலவில் தொடங்கப்பட்டு செயல்படாமல் இருப்பதால் அரசு நிதி வீணாகிக் கொண்டிருக்கிறது.
முதல் மின் நிலைய இயந்திரங்களை பெல் நிறுவனத்தினர் வந்து சோதனை செய்து பார்த்துவிட்டு, இயந்திரங்களை ஹைதராபாதுக்குக் கொண்டுவந்தால்தான் சரி செய்ய முடியும் எனத் தெரிவித்தனர். இந்நிலையில், இதனை சரி செய்யும் பொறுப்பை, தற்போது ஈரோட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கின்றனர்.
2-வது மின்நிலைய இயந்திரங்கள் அனைத்துமே தரமற்றவையாக பொருத்தப்பட்டிருப்பதால் இதனை சரி செய்ய சுமார் ரூ. 70 கோடி வரை செலவாகும் எனத் தெரிகிறது.
இதுகுறித்து, மின்நிலைய மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திரன் கூறியதாவது:
முதல் மின்நிலையம் மே 18 ஆம் தேதி முதல் செயல்படாமல் உள்ளது. ஜெனரேட்டர் பழுதாகி இருப்பதால், ஒரு மாதத்தில் பழுது நீக்கப்பட்டு மின்நிலையம் மீண்டும் உற்பத்தியை துவக்கி விடும். 2-வது மின்நிலைய இயந்திரக் கோளாறுகள் குறித்து அதனைக் கொள்முதல் செய்த நிறுவனத்திடம் தெரிவித்துள்ளோம். இத்தாலியில் இருந்துவந்து பார்த்து விட்டு போயிருக்கிறார்கள். இயந்திரங்களுக்கு போதுமான கேரண்டி இருப்பதால் 3 மாதத்தில் பழுது நீக்கித் தருவதாக சொல்லி இருக்கிறார்கள்.
எனவே இவ்விரு மின்நிலையங்களும் விரைவில் மின் உற்பத்தியை தொடங்கும்.
ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்த பெயர்ப்பட்டியலை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி இருக்கிறோம்.
விரைவில் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு விடுவர் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.