கழிவுநீரால் மாசடைந்துவரும் வைகை ஆறு
பரமக்குடி, ஜூலை 27: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகரில் கழிவுநீர் கலப்பதாலும், மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் அதிகமாகக் கொட்டப்படுவதாலும், வைகை ஆறு மாசடைந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின


பரமக்குடி, ஜூலை 27: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகரில் கழிவுநீர் கலப்பதாலும், மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் அதிகமாகக் கொட்டப்படுவதாலும், வைகை ஆறு மாசடைந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதனால், குடிநீரில் மாசு கலப்பதுடன், வைகை ஆறு கழிவுநீர் வாய்க்காலாக மாறும் அபாயம் உள்ளதாகவும், இதனைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பரமக்குடி வைகை ஆற்றின் கரை ஓரங்களில் சுந்தரராஜப்பெருமாள் கோயில், ஹனுமார் கோயில், வரதராஜப்பெருமாள் கோயில், மீனாட்சி அம்மன் கோயில், முத்தா லம்மன் கோயில் என பல கோயில்கள் கட்டப்பட்டு கோயில்கள் நிறைந்த புண்ணிய தலமாகவும் விளங்கி உள்ளது.
ஆற்றின் கரையோரத்தில் கட்டப்பட்டிருந்த குமரன் படித்துறை, முத்தாலம்மன் கோயில் படித்துறை,பெருமாள்கோயில் படித்துறைகளில் பக்தர்கள் புனித நீராடி கோயில்களில் வழிபடுவது வழக்கம். வைகை ஆறு, தற்போது வறண்ட ஆறாகி கழிவுநீர் பாய்ந்தும், குப்பைகள் கொட்டப்படும் இடமாகவும் மாறிவிட்டது.
ஆற்றில் கழிவுநீர் சேரும் இடங்களில் இருந்து ஆழ்குழாய் அமைக்கப்பட்டு, நகரின் பெரும்பாலான பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இதனால், குடிநீருடன் மாசு கலந்து தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, நகராட்சி அலுவலர் ஒருவர் கூறியதாவது:
முன்பு நகராட்சிக் கழிவுகள் அனைத்தும் நகரிலிருந்த பல ஊருணிகளில் கொட்டப்பட்டு வந்தன. தற்போது, அந்த ஊருணிகள் பெரும்பாலும் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடங்களாக மாறிவிட்டன. இதனால், கழிவுகள் கொட்ட இடமின்றி வைகை ஆற்றின் கரையோரம் கொட்டப்படுகின்றன என்றார்.
பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பழ. வள்ளியப்பன் கூறியது:
நகர்ப் பகுதியிலிருந்து வைகை ஆற்றில் பாயும் கழிவுநீரைத் தடுக்க பாதாளச் சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. இதற்காக கழிவுநீரை சுத்திகரிக்கத் தேவையான இடங்களை ஒதுக்கியுள்ளோம். திட்டத்தை நிறைவேற்ற வேண்டியது நகராட்சியின் பொறுப்பு.
ஆற்றில் குப்பைகளைக் கொட்டுவது குறித்து, கோட்டாட்சியர் முன்னிலையில், நகர்மன்றத் தலைவர், நகராட்சி அலுவலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார் அவர்.
நீர் நிலைகளைப் பாதுகாக்க அரசு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தும், அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலை தொடர்ந்தால், நகரில் இருந்த நீர்நிலை ஆதாரமான ஊருணிகள் காணாமல்போனது போல, வைகை ஆறும் விரைவில் காணாமல் போகும் அபாயம் உள்ளது எனப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனைத் தடுக்க, வைகை ஆற்றின் இரு கரை ஓரங்களிலும் காட்டுப் பரமக்குடியில் இருந்து, காக்காதோப்பு வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலைகளை அமைக்க வேண்டும்.
ஆற்றில் குப்பைகளைக் கொட்டுவதைத் தடுக்க வேண்டும். கழிவுநீரை ஆற்றில் திருப்பி விடுவதை நிறுத்த வேண்டும். இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...