சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சினிமாவுக்கு எதிர்காலம் உண்டு!

சினிமாவில் நடிப்பது என்பதே அலாதியான விஷயம்தான். பொருளோடு புகழும் சேரும் போது கிடைக்கும் ஆனந்தத்துக்கு அளவு என்பதே இல்லை. தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருபவருக்கு இந்த இரண்டும் சேர்ந்து கிடைத்தால் எவ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:51 am

சினிமாவில் நடிப்பது என்பதே அலாதியான விஷயம்தான். பொருளோடு புகழும் சேரும் போது கிடைக்கும் ஆனந்தத்துக்கு அளவு என்பதே இல்லை. தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருபவருக்கு இந்த இரண்டும் சேர்ந்து கிடைத்தால் எவ்வாறு இருக்கும்? அந்த மகிழ்ச்சியைத்தான் நம்மிடம் பகிர்ந்து கொண்டார் "மைனா' படத்துக்காக குணசித்திர நடிகருக்கான தேசிய விருது பெற்ற தம்பி ராமய்யா.

 ""எனது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் ராராபுரம். அப்பா ஜெகன்நாதன் தமிழ்ப்புலவர். தாயார் பாப்பம்மாள். எனக்கு 3 தம்பிகள் ஒரு தங்கை. எனது தம்பி ரியாத்தில் தண்ணீரை சேமிப்பதற்கான புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்து சவுதி அரேபிய அரசால் மிஸ்டர் பிரெய்ன் பட்டம் பெற்றவர். என் மனைவி சாந்தி. எங்களுக்கு விவேகா என்ற மகளும், உமாபதி என்ற மகனும் உள்ளனர். மகள் 2009 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக் கழகத் தேர்வில் பயோடெக் பாடத்தில் தங்கப்பதக்கம் வென்று தற்போது ஸ்வீடனில் எம்.எஸ். படித்து வருகிறார். மகன் கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் இறுதியாண்டு மாணவர்.

 நான் இளங்கலை பொருளாதாரம் 2ஆம் ஆண்டு படிக்கும்போது எனது தந்தை இறந்து போனதால் குடும்ப சூழ்நிலை காரணமாக, இளமையில் வறுமை, சம்பாதித்து தீரவேண்டிய நிர்பந்தம் காரணமாக சென்னைக்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டது. 1981ல் சென்னைக்கு வந்தேன். தனியார் நிறுவனத்தில் டெலிபோன் ஆபரேட்டர், வரவேற்பாளர், மேலாளர் என பொறுப்புகள் வந்தன. ஹோட்டலுக்கு வரும் சினிமா பிரபலங்கள் மூலம் சினிமாவுக்குள் நுழைய வாய்ப்பு கிடைத்தது.

 1996- ஆம் ஆண்டில் "வீரபாண்டி கோட்டையிலே' படத்தில் வசன கர்த்தாவாக அறிமுகம் ஆனேன். எனது செயல்பாடுகளைக் கண்ட இயக்குநர் என்னை நடிக்க வைத்தார். 800 அடி வரையிலான காட்சிகளில் நான் நடித்தும் படத்தின் நீளம் அதிகமாக இருந்ததால் பின்னர் அக்காட்சிகள் நீக்கப்பட்டன. 1997-ல் மணிவாசகம் இயக்கத்தில் "மாப்பிள்ளை கவுண்டர்' படத்தில் நடித்தபோது பிரபு என்னை உதவி இயக்குநராகப் பணிபுரிய ஊக்கப்படுத்தினார். உதவி இயக்குநரான எனக்கு இந்தப் படத்தில் 600 அடி வரை நான் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்ட போதிலும் முந்தைய படத்தைப் போலவே படத்தின் அதிக நீளம் காரணமாக இதுவும் நீக்கப்பட்டது.

 பி.வாசு இயக்கத்தில் "மலபார் போலீஸ்' கதை விவாதத்தில் பங்கேற்ற போது என்னுடைய மாடுலேஷன், ஸ்டைலைப் பார்த்து முதல் முறையாக கவுண்டமணியுடன் சேர்ந்து நடித்த காட்சி நான் நடித்து வெளிவந்த முதல்படமாக அமைந்தது.

 முரளி, நெப்போலியன், வடிவேலு, நாசர், பிரதியூஷா ஆகியோரை வைத்து "மனு நீதி' படத்தை இயக்கினேன். பின்னர் "நைல்நதியே' என்ற படவாய்ப்பு கிடைத்தது. முந்தைய படத்தின் தயாரிப்பாளரே இப்படத்தைத் தயாரித்த போதிலும், நான் கேட்ட கதாநாயகர் கிடைக்காததால் பூஜையுடன் படம் நின்று போனது. சினிமா வாழ்க்கையில் தோல்வி மேல் தோல்வி. வடிவேலுவுடன் பல படங்களில் இணைந்து பணியாற்றியது நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது.

 இந்த சூழ்நிலையில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் விழாவில் இயக்குநர் பிரபுசாலமனைச்

 சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனக்காக ஒரு முழு நீள பாத்திரம் கொண்ட படத்தை உருவாக்க உள்ளதாகத் தெரிவித்தார். "மைனா' படத்தில் முழுநீள காட்சியில் நடித்ததால் சிறந்த குணசித்திர நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. இது எனக்கு என் அப்பா செய்த ஆசீர்வாதமாக உணர்கிறேன்.

 ஏற்கனவே நார்வே உலக தமிழ்பட விழாவில் சிறந்த படம், சிறந்த போட்டோகிராபி, சிறந்த குணசித்திர நடிகர், சிறந்த புதுமுக நடிகர் என நான்கு விருதுகளை "மைனா' படம் பெற்றுள்ளது.

 வசனகர்த்தா, இயக்குநர், நடிகர் எனப் பலமுகங்களைக் கொண்டாலும் படைப்பாளியாக இருப்பது என்னவோ இயக்குநர்தான். அதுவே எனக்கு ஆத்மதிருப்தியாக இருக்கும்.

 ஒரு நடிகர் எல்லோராலும் விரும்பப்படுபவராக இருக்க வேண்டும். நடிகர்களிடையே சாதி, மதம், இனம் இல்லை. நடிகர் என்பவர் பொதுச் சொத்து, எனவே நடிகர் தன்னைத் தானே ஒரு வட்டத்திற்குள் அடைத்துக் கொள்பவராக சிக்கிக்கொள்ளக் கூடாது. இந்தியா போன்ற நாடுகளில் சினிமாவுக்கான எதிர்காலம் எப்போதுமே இருந்து கொண்டுதான் இருக்கும். நாளுக்கு நாள் எந்த முறையானாலும் சினிமா பார்ப்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டுதான் இருக்கும். சினிமாவை அழிக்க முடியாது. சினிமா என்பது ஒவ்வொரு காலகட்டத்தில் உள்ள கலாசாரத்தையும் அறிவையும் வளர்ச்சியையும் பிரதிபலிப்பது'' என்றார் தம்பி ராமய்யா.

 படம் - ஜி.விமல் கண்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.