போடி குரங்கனி காவல் நிலையம் செயல்படுமா?
போடி, செப். 26: போடி குரங்கனி காவல் நிலையம் செயல்படாமல் பூட்டிய நிலையில் உள்ளது. இதை செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போடி பகுதியில் மலை கிராமங்கள் அதிகம் உள்ள


போடி, செப். 26: போடி குரங்கனி காவல் நிலையம் செயல்படாமல் பூட்டிய நிலையில் உள்ளது. இதை செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போடி பகுதியில் மலை கிராமங்கள் அதிகம் உள்ளன. குறிப்பாக, கேரள மாநில எல்லையில் போடி பகுதி அமைந்துள்ளதால், இரு மாநில எல்லையையும் பிரிக்கும் மலை கிராமங்கள் அதிகம் உள்ளன. அதேபோல், கொடைக்கானல் வனப் பகுதியையும் இணைக்கும் பகுதியாக போடி மலைப் பகுதி உள்ளது.
போடி கொட்டகுடி, மேற்கு மலை, வடக்கு மலை ஆகிய வருவாய் கிராமங்களின் கீழ் குரங்கனி, கொட்டகுடி, போடிமெட்டு, டாப்-ஸ்டேஷன், சென்ட்ரல் ஸ்டேஷன், முதுவாக்குடி, முட்டம், காரிப்பட்டி, பிச்சங்கரை, ஊத்தாம்பாறை, ஊஞ்சல், மல்லிப்பட்டி போன்ற ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன.
இக் கிராமங்களில் குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும், கேரளப் பகுதியிலிருந்து சமூக விரோதிகள் ஊடுருவுவதைத் தடுக்கவும், கேரளப் பகுதியிலிருந்து கஞ்சா கடத்தலைத் தடுக்கவும் குரங்கனி காவல் நிலையம் 1986-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது.
குரங்கனி மலை கிராமத்தில் பயணியர் தங்கும் விடுதியாகச் செயல்பட்ட கட்டடத்தில், காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. குரங்கனி காவல் நிலையத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர்-2, தலைமைக் காவலர்-1, முதுநிலைக் காவலர்-3, இளநிலைக் காவலர்- 14 உள்ளிட்ட 20 பேர் பணி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தற்போது இந்த காவல் நிலையத்தில் இரண்டு சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் மற்றும் சில தலைமைக் காவலர்கள் மட்டுமே உள்ளனர்.
இவர்களும் காவல் நிலையத்துக்கு வருவதில்லை. போடி நகர் காவல் நிலையத்திலேயே குரங்கனி போலீஸôர் அலுவலகம் அமைத்துச் செயல்படுகின்றனர். புகார் கொடுக்க வேண்டுமென்றால், மலை கிராம மக்கள் போடி நகர் காவல் நிலையத்துக்குத்தான் வர வேண்டும்.
மேலும், குரங்கனி காவல் நிலையத்துக்கு எப்போதாவது ஒரு காவலர் வருவதாகவும், அவரும் முறையாகப் பணி செய்வதில்லை என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
மலை கிராமத்தில் அமைந்துள்ளதால், மேலதிகாரிகளும் இந்த காவல் நிலையத்துக்கு ஆய்வுக்கு வருவதில்லை என்றும் கூறப்படுகிறது.
இக் காவல் நிலையத்தை தேனி காவல் கண்காணிப்பாளர் 27.11.2007-ம் தேதியும், திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவர் 11.12.2008-ம் தேதியும், கடைசியாக ஆய்வு செய்ததாக காவல் நிலையத் தகவல் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குரங்கனி மலை கிராமம் சமீபத்தில் நறுமண சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள், வெளி மாநில, வெளிநாட்டவர்கள் அதிகம் வந்து செல்லும் பகுதியாக உள்ளது.
குரங்கனி மலைப் பகுதி கேரள மற்றும் கொடைக்கானல் வனப் பகுதிகளை இணைக்கும் பகுதியாக உள்ளதால், நக்சலைட்டுகள் உள்ளிட்ட சமூக விரோதிகள் நடமாட்டம் இருக்கும் பகுதியாகக் கருதப்பட்டு, கியூ பிரிவு போலீஸôர் அடிக்கடி இப் பகுதிக்கு வந்து கண்காணிக்கும் நிலையில், உள்ளூர் போலீஸôர் மட்டும் இல்லாதது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட காவல் துறை உரிய நடவடிக்கை எடுத்து போடி குரங்கனி காவல் நிலையத்தை முறையாகச் செயல்படுத்த வேண்டும் என குரங்கனி மலை கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...