சிவகங்கை, ஏப். 3: கவிச்சக்கரவர்த்தி கம்பன் ஒரு சொற்களஞ்சியம். அவன் தனது ராமாயணத்தில் 80 ஆயிரம் சொற்களை கையாண்டுள்ளான் என்று நாஞ்சில் நாடன் கூறினார்.
கம்பன் திருநாள் காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவில் கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன் வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் கூறியது: இலக்கிய நிகழ்ச்சிகளை 10 ஆண்டுகள் தொடர்ந்து நடத்துவதே சிரமமானது. ஆனால், உலகளவில் 74 ஆண்டுகளாக இலக்கிய நிகழ்ச்சியை நடத்தும் ஒரே அமைப்பு காரைக்குடி கம்பன் கழகம்தான்.
தலைமையுரை ஆற்றவந்துள்ள நாஞ்சில் நாடன் முறையாக கம்பனை கேட்டு பாடம் பயின்றவர். இவர் பவள விழாவுக்கு முந்தைய ஆண்டில் தலைமை வகிப்பது சிறப்பு வாய்ந்தது. 88 வயது முதியவர் எஸ்.கே.ஆச்சாரியார் திருப்பதி திருமலையில் 18 ஆண்டுகள் ஆஸ்தான சிற்பியாக பணியாற்றியவர். குமரி முனையில் உள்ள விவேகானந்தர் பாறை மீது உள்ள தியான மண்டபத்தை நிறுவியவர். இங்கு அமைதியாக சென்று அமர்ந்தால் நம் காதுகளில் ஓம் என்ற ஓங்கார ஒலி கேட்கும் அவ்வளவு சிறப்பாக அதை இவர் வடிவமைத்துள்ளார் என்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் பழ.முத்துவீரப்பன், மீனாட்சி-பழனியப்பா அறக்கட்டளைச் சொற்பொழிவாக தெ.ஞானசம்பந்தம் நிகழ்த்திய கம்பர் போற்றிய கவிஞர் நூலை வெளியிட்டு தொடக்க உரையாற்றினார். இந்த நூல் குறித்து அவர் கூறுகையில், கம்பரையும், வள்ளுவரையும் இந்த நூலில் ஆசிரியர் ஒப்பிட்டுள்ளார். வள்ளுவர் கையாண்ட 28 சொற்களை கம்பர் எவ்வாறு கையாண்டுள்ளார் என நூலில் விளக்கியுள்ளார். திருக்குறளில் உள்ள கருத்துகள், பாத்திரங்கள், சித்திரக்கூடம் ஆகியவை கம்பனில் எவ்வாறு கையாளப்பட்டுள்ளன என 4 அத்தியாயங்களில் விளக்கியுள்ளார்.
கம்பர் தனது காப்பியத்தில் ராமருக்கு நிகராக அனுமன் பாத்திரத்தைப் படைத்துள்ளார் என எனக்குத் தெரிகிறது. ராமன் தான் செய்த தவறுகளை 5 முறை ஒப்புக்கொள்கிறான். அதே போல அனுமனும் 5 இடங்களில் தனது குற்றங்களை ஒப்புக்கொள்வதாக ராமாயணத்தில் வருகிறது. கம்பனின் சொல்லாக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். கம்பன் கூறிய முத்திரை அடிகள் தொகுக்கப்பட வேண்டும். கம்பனுக்கு சோழ மன்னர்கள் புரவலர்களாக ஆகாத காரணம் குறித்து ஆராய வேண்டும் வேண்டும் என்றார்.
கம்பர் பித்தர் வேலூர் எஸ்.என்.குப்புசாமி முதலியார், புத்தகப் பித்தர் எம்.என்.சந்திரசேகரன் ஆகிய கம்பன் அடியார்களுக்கு பேராசிரியர் தெ.ஞானசம்பந்தம் நினைவஞ்சலி செலுத்தி பேசினார்.
அவர் கூறியது: தசரதன் மகன் மீதும், மண்டோதரி கணவன் மீதும் உயிரை வைத்திருந்தனர். அதுபோல குப்புசாமி முதலியார் கம்பன் விழாக்கள் மீது உயிரை வைத்திருந்தார். எங்கு கம்பன் விழா நடந்தாலும் அங்கு தவறாமல் செல்பவர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக தனது சொந்த செலவில் கம்பன் விழாவை வேலூரில் நடத்தியவர். அவர் பிரான்ஸில் நடைபெற்ற கம்பன் விழாவுக்கு செல்ல முடியாத வருத்தத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். ஓவிய ஆசிரியரான எம்.என்.சந்திரசேகரனின் வீட்டில் எந்த தமிழரிஞர் வீட்டிலும் இல்லாத பழம் நூல்கள் இருக்கும் என்றார்.
கோவிலூர் ஆதினகர்த்தர் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள், சிற்ப குரு வை.கணபதி ஸ்தபதி படத்தை திறந்து வைத்து ஸ்தபதி எஸ்.கே.ஆச்சாரியருக்கு சிற்ப கலா சக்ரவர்த்தி பட்டம் வழங்கி பேசினார். கணபதி ஸ்தபதி வள்ளுவர் கோட்டத்துக்கான வரைபடத்தை தயாரித்து, திட்டம் வகுத்துக் கொடுத்தார். அதற்கு செயல் வடிவம் கொடுத்தவர் எஸ்.கே.ஆச்சாரியார்தான் என்று அவர் கூறினார்.
கம்பன் அறநிலை மேலாளர் ம.ஸ்ரீதரன் படத்தை திறந்துவைத்து ஸ்தபதி எஸ்.கே.ஆச்சாரியார் உரையாற்றினார்.
கம்பன் கழகம் நடத்திய ஒப்பித்தல், கட்டுரை, பேச்சு உள்ளிட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு நாஞ்சில் நாடன் பரிசுகளை வழங்கி தலைமை உரையாற்றினார். அவர் கூறுகையில், சில அரிதான சொற்களை சில எழுத்தாளர்கள் எழுதியதை பார்த்தபோது அந்த வார்த்தைகள் கம்பனின் ராமாயணத்தில் இருப்பது தெரிந்தது. இதன் மூலம் படைப்பிலக்கியவாதியான எனக்கு கம்பன் மீது ஈர்ப்பு ஏற்பட்டது.
கம்பன் ஒரு சொற் கிடங்கு, பண்டாரம் என்று கூறலாம். திருக்குறளில் 1330 குறள்கள் உள்ளன. ஒரு குறளில் 7 சீர்கள் இருக்கும். மொத்தத்தில் 9310 சீர்கள். இவற்றில் திரும்பத் திரும்ப இடம்பெற்றவற்றை நீக்கினால் 4310 சொற்கள் திருக்குறளில் பயன்படுத்தப்பட்டுள்ளன எனத் தெரியவருகிறது. சீவகசிந்தாமணியில் 3145 சொற்கள் உள்ளன. கம்பன் தனது ராமாயணத்தில் 3 லட்சம் சொற்களை பயன்படுத்தியுள்ளார். இதிலும் திரும்பத் திரும்ப இடம்பெற்ற சொற்களை நீக்கினால் குறைந்தபட்சம் 80 ஆயிரம் சொற்களை கம்பன் கையாண்டுள்ளான். 1200 சொற்களை அறிந்தாலே ஒருவர் ஒரு மொழியை தெரிந்தவர் எனக் கூறலாம். தமிழில் பதிவு செய்யப்படாத சொற்கள் 10 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று ஒரு கருத்து நிலவுகிறது.
கம்பனின் சொல் ஆற்றல் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
நாம் மறந்த பல தூய தமிழ்ச் சொற்கள் மலையாளத்தில் பயன்படுத்தப்படுகிறன. திரைப்பாடல்களில் வெறும் 400 சொற்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவதாக கவிஞர் வைரமுத்து கூறுகிறார். தமிழ்ச் சொற்களை அழியாமல் காக்க வேண்டியது நமது கடமை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யாவை பாராட்டிய புஜாரா!

வாக்குச்சாவடிகளில் அல்வா! முதல்முறை வாக்காளர்களை ஈர்க்க தேர்தல் ஆணையம் ருசிகர முடிவு!

முதல்வர் ஸ்டாலினின் 3ஆம் கட்ட தேர்தல் பிரசார சுற்றுப் பயணம்

ரூ. 70 கோடி வசூலித்த யூத்!
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

