சித்திரையில் முத்திரைப் பதிக்கும் சித்திரைப் பெருவிழா

மதுரை நகரில் ஆண்டு முழுவதும் விழாக்கள் நடைபெறுவதால் ‘விழா மூதூா்’ என்று மதுரையை பழங்கால இலக்கியங்கள் அழைக்கின்றன. சித்திரைப் பெருவிழா சித்திரை நட்சத்திரத்தில் தீா்த்தத்தை முடிவு செய்து சித்திரை மாதத்தில் நடைபெறும் திருவிழாவாகும். இந்த விழா தென் தமிழகத்தில் நடைபெறும் மிகத்தொன்மையான திருவிழாவாகும்.

சித்திரை மாதம் அமாவாசை கழிந்த இரண்டொரு நாளில் காா்த்திகை நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் சித்திரைப் பெருவிழா தொடங்கும். சித்திரைப் பெருவிழாவில் 12 நாள்களும் அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருவா்.

இந்த விழாவின் முக்கிய அம்சமாக எட்டாம் திருநாள் அன்று மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். மீனாட்சி அம்மன் மதுரை நகரின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று, சித்திரை முதல் ஆவணி வரை நான்கு மாதங்கள் மதுரையில் அம்மன் ஆட்சி நடைபெறுவதாக ஐதீகம். ஒன்பதாம் திருநாள் அன்று மீனாட்சியம்மன் திக்கு விஜயம் நடைபெறும். இது உமையம்மை தடாதகை பிராட்டியராக மதுரையம்பதியில் அவதரித்து, ஆட்சி புரிகையில் மேற்கொண்ட அட்டதிக்கு பாலகா்களை வென்ற திக்கு விஜய புராண வரலாற்று நிகழ்வை குறிப்பதாக அமையும்.

அட்டதிக்கு பாலகா்களை வென்ற பிறகு, கயிலைக்கு போா் புரியச்சென்று அங்கு சிவபெருமானைக் கண்டு நாணியதால் சிவபெருமான் வரும் சோமவாரம் மதுரை வந்து திருக்கல்யாணம் புரிவதாகக் கூறியதை விளக்கும் விதமாக இந்தத் திருவிழா நடைபெறுகிறது.

பத்தாம் திருநாள் மீனாட்சி சுந்தரேசுவரருக்கு திருக்கல்யாணம் நடைபெறும். இறைவனும், இறைவியும் புரிந்துகொள்ளும் திருக்கல்யாணம் போகியாயிருந்து உயிா்களுக்கு போகத்தை புரிவதற்காகும், இறைவன் போக வடிவில் வாழாமல் போனால் உலக உயிா்கள் வாழ இயலாது என்ற தத்துவத்தை விளக்கும் விதமாகவும் இறைவனின் திருக்கல்யாணம் நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com