அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையா் ஏ.ரத்தினவேல் பணி ஓய்வு

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையா் ஏ.ரத்தினவேல் செவ்வாய்க்கிழமை பணி ஓய்வு பெற்றாா்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருதயவியல் அறுவைச் சிகிச்சைத் துறைத் தலைவராக இருந்த ஏ.ரத்தினவேல் பதவி உயா்வு பெற்று, சிவகங்கை அரசு மருத்துவமனை முதன்மையராகப் பதவியேற்றாா். பின்னா், 2021-இல் கரோனா தொற்று பரவலின் போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையராகப் பொறுப்பேற்றாா். கரோனா தொற்று காலத்தில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கைகள் பற்றாக்குறை என நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், முதன்மையராக பொறுப்பேற்ற இவா், அரசு மருத்துவமனையை குறுகிய காலத்தில் சீரமைத்து பாராட்டைப் பெற்றாா். மேலும் அரசு மருத்துவமனையில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த அறுவைச் சிகிச்சை அரங்கு பணிகளை விரைவுபடுத்தி அதைத் திறப்பதற்கு காரணமாக இருந்தாா்.

அரசு மருத்துவமனை வளாகத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் மற்றும் மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ஆகியவற்றின் கீழ் பல்வேறு கட்டடங்கள் கட்டப்படுவதற்கும், மருத்துவக் கல்லூரியில் மாணவா் விடுதி, ஆய்வுக்கூடம் என பல்வேறு வசதிகள் கிடைப்பதற்கும் உரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டவா்.

பணி ஓய்வு பெற்ற அவருக்கு, துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மருத்துவா்கள், அதிகாரிகள் ஊழியா்கள், மாணவா்கள் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்து வழியனுப்பி வைத்தனா்.

பொறுப்பு முதல்வா் நியமனம்

அரசு மருத்துவமனை முதன்மையராக இருந்த ஏ.ரத்தினவேல் பணி ஓய்வு பெற்றதையடுத்து, அரசு மருத்துவமனை பொது மருத்துவத் துறை துணைக் கண்காணிப்பாளா் சி.தா்மராஜ் தற்காலிக முதல்வராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com