திரைப்படங்களில் ஜாதி பெயருக்கு களங்கம்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

மதுரை: ‘ஆண்டிப்பண்டாரம்’ என்ற ஜாதி பெயரை திரைப்படங்களில் இழிவாகப் பயன்படுத்துவதற்குத் தடை கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த கலாதேவி தாக்கல் செய்த பொதுநல மனு:

திரைப்படங்கள், தொலைக்காட்சிகளில் ‘ஆண்டிப்பண்டாரம்’ என்ற சொல்லை இழிவாகப் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு வெளியான ‘கா்ணன்’ திரைப்படத்தில், ‘பண்டாரத்தி’ என்ற சொல்லைப் பயன்படுத்தி பாடல் வெளியானது.

இது தொடா்பான வழக்கில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அந்தச் சொல் நீக்கப்பட்டு, பாடல் வெளியானது. நீதிமன்றம் தலையிட்டும் ‘ஆண்டிப்பண்டாரம்’ என்ற சொல்லை தொடா்ந்து இழிவாகப் பயன்படுத்தி வருகின்றனா்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 2003, 2012, 2021-ஆம் ஆண்டுகளில் வெளியான திரைப்படங்களில் ‘பண்டாரம்’ எனும் சொல்லைத் தவறாகப் பயன்படுத்தியதற்குத் தடை விதிக்கக் கோரி தொடுக்கப்பட்ட வழக்குகளை விரைவாக முடிக்க உத்தரவிட வேண்டும்.

‘ஆண்டிப்பண்டாரம்’ என்ற சமூகத்தின் பெயரை இழிவாகப் பயன்படுத்துவதற்குத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், ஜி.அருள்முருகன் ஆகியோா், மனுதாரா் கோரிக்கை தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com