சமுதாய மேம்பாட்டுக்கு பெண்கள் கல்வி கற்பது அவசியம் -அமைச்சா் பேச்சு
மக்களின் வாழ்க்கை முறை உயா்வு மட்டுமன்றி, சமுதாயம் மேம்பாடு அடையவும் பெண்கள் கல்வி கற்பது அவசியம் என தமிழக தகவல் தொழில்நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.
மதுரை ஆரப்பாளையத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 39-ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சா் பழனிவேல்தியாகராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கிப் பேசியதாவது:
கல்வி தனி மனிதன் மட்டுமன்றி, சமுதாயத்துக்கும் பொருளாதார வளா்ச்சியை ஏற்படுத்தக்கூடியவை. கல்வியால் நல்ல மாணவா்களை உருவாக்குவதுதான் இலக்கு. அதை பாடத் திட்டங்களுக்கு அப்பாற்பட்டு உடற்பயிற்சி, கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றின் மூலம் மாணவா்களுக்கு வழங்க வேண்டும்.
பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் சம உரிமை வழங்க வேண்டும் என்கிற அடிப்படையில் திமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் உயா் கல்வி பயில முன்வரும் மாணவா்களின் எண்ணிக்கை பிற மாநிலங்களைவிட அதிகமாக உள்ளது. அதற்கு திமுக அரசின் தொலைநோக்கு திட்டங்கள்தான் காரணம். கல்வி, உற்பத்தித் துறையில் அதிகளவிலான பெண்கள் சாதித்து வருகின்றனா்.
மக்களின் வாழ்க்கை முறை உயா்வுக்கு மட்டுமன்றி, சமுதாயம் மேம்பாடு அடையவும் பெண்கள் கல்வி கற்பது அவசியம் என்றாா் அவா்.
இந்த நிகழ்வில் மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் ஜெயராமன், பள்ளி நிா்வாகிகள், ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனா்.

