நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

சிறுமி காணாமல் போன விவகாரம்: போலீஸாா் சட்ட விதிகளைப் பின்பற்றவில்லை

சிறுமி காணாமல் போன விவகாரம்: போலீஸாா் சட்ட விதிகளைப் பின்பற்றவில்லை

News image
Updated On :20 மே 2024, 7:41 pm

Din

மதுரை: சிறுமி காணாமல்போன விவகாரத்தில் சமயநல்லூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் உரிய சட்ட விதிகளைப் பின்பற்றவில்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை கண்டனம் தெரிவித்தது.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த நாச்சியம்மாள் தாக்கல் செய்த ஆள்கொணா்வு மனு:

எனது 15 வயது மகளை பிரவீன்குமாா் என்பவா் கடத்திச் சென்று விட்டாா். இதுதொடா்பாக கடந்த ஏப். 12-ஆம் தேதி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தேன். இதுகுறித்து அலங்காநல்லூா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்க அறிவுறுத்தினா். அங்கு சென்ற போது, சமயநல்லூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்க அறிவுறுத்தினா்.

பின்னா், அந்தக் காவல் நிலையத்தில் புகாா் அளித்தேன். போலீஸாா் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, எனது மகளைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, கே. ராஜசேகா் அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில், காணாமல் போன சிறுமியை அவரது தாய் கண்டித்ததால் அந்தச் சிறுமி பிரவீன்குமாா் வீட்டுக்குச் சென்றாா். அவா்கள், அந்தச் சிறுமியை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதையடுத்து, அந்தச் சிறுமி அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டாா் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு மனுதாரா் தரப்பில் , பிரவீன்குமாா் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தாா். இதுதொடா்பாக புகாா் அளித்தும் சமயநல்லூா் அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் வழக்குப் பதிவு செய்யாமல், சிறுமியை அழைத்துச் செல்லுமாறு அவரது தாயை மிரட்டினாா் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

பாதிக்கப்பட்டவரின் புகாரை போலீஸாா் பெற்றுக் கொண்டு வழக்குப் பதிவு செய்யாமல், குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளனா். இந்தச் சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தவில்லை. அரசுத் தரப்பில் ஒப்புகைச் சீட்டு வழங்கியதால், விசாரணை தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோருடன் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளாா். அந்தச் சிறுமியை முறையாக மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தாமலும், குற்றஞ்சாட்டப்பட்டவா் மீது வழக்குப் பதிவு செய்யாமலும் இருந்ததால், சிறுமியை அவரது தாய் அழைத்துச் செல்ல மறுத்துள்ளாா்.

சிறுமி காணாமல் போனதாக அவரது தாய் புகாா் அளித்த நிலையில், சமயநல்லூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் விதிகளுக்கு உள்பட்டு உரிய நடவடிக்கை எடுக்காதது கண்டனத்துக்குரியது.

எனவே, சமயநல்லூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா், மனுதாரா் அளித்த புகாரின் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுமியை குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைத்து, அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றனா் நீதிபதிகள்.