அமைதிக்கான அச்சாரம்!
லடாக் விவகாரம் தொடர்பாக அனைத்துத் தரப்பினருடனும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நடத்த ஏதுவாகவும் வாங்சுக் மீதான தேசியப் பாதுகாப்புச் சட்ட நடவடிக்கை திரும்பப் பெறப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருப்பதைப் பற்றி...


சுற்றுச்சூழல் ஆர்வலரும், சமூக செயற்பாட்டாளருமான சோனம் வாங்சுக் மீதான தேசியப் பாதுகாப்புச் சட்ட நடவடிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற்றதையடுத்து, ஆறு மாத சிறைவாசத்திலிருந்து அவர் விடுதலை அடைந்திருக்கிறார். மத்திய அரசின் இந்த திடீர் நடவடிக்கை யாருமே எதிர்பார்க்காதது என்றாலும், அனைத்துத் தரப்பினரின் வரவேற்பையும் பெற்றிருக்கிறது.
யூனியன் பிரதேசமான லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து அளிக்கக் கோரி 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 24, 25-ஆம் தேதிகளில் வாங்சுக் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது ஏற்பட்ட வன்முறையில் 22 காவல் துறையினர் உள்பட 45 பேர் காயமடைந்தனர். மேலும் 4 பேர் உயிரிழந்தனர். சட்டம்-ஒழுங்கு நிலையைச் சுட்டிக்காட்டி வாங்சுக் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட நிலையில் இப்போது விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.
லடாக் விவகாரம் தொடர்பாக அனைத்துத் தரப்பினருடனும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நடத்த ஏதுவாகவும் வாங்சுக் மீதான தேசியப் பாதுகாப்புச் சட்ட நடவடிக்கை திரும்பப் பெறப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. வாங்சுக் விடுதலையை வரவேற்றாலும் போராட்டத்தின்போது கைதான மற்றவர்களையும் விடுவிக்க வேண்டும் என்றும், தனி மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தியும் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக எல்ஏபி அறிவித்திருக்கிறது. தனி மாநில அந்தஸ்து கோரிக்கை என்பது மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் யூனியன் பிரதேசங்கள் வழக்கமாக முன்வைக்கும் கோரிக்கையாகத் தெரியலாம். லடாக்கைப் பொருத்தவரை அந்தக் கோரிக்கை தீவிரமானது.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதிலிருந்து தொடங்குகிறது இந்த விவகாரம். அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதையடுத்து, ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு சட்டப்பேரவை உண்டு. லடாக் யூனியன் பிரதேசத்துக்கு சட்டப்பேரவை கிடையாது. இதனால், லடாக் மக்கள் நேரடியாக மத்திய அரசு நிர்வாகத்தின் கீழ் வந்தனர்.
லடாக் மக்கள்தொகையில் 97 சதவீதம் பேர் பழங்குடியினர். லடாக்கில் முன்னர் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகள் இருந்தன. இப்போது சட்டப்பேரவை பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில், முடிவெடுக்கும் அதிகாரம் அனைத்தும் அதிகாரிகளின் கைகளுக்குச் சென்றுவிட்டது. இதனால், வெளிநபர்களின் ஆதிக்கம் அதிகரிக்கும், அரசு நிர்வாகத்திலிருந்து தாங்கள் விலகிச் செல்ல நேரிடும் என்பது லடாக் மக்களின் அச்சம்.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஓராண்டு கழித்து வசிப்பிட விதிகளில் திருத்தம் செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, காஷ்மீரிகள் அல்லாத மக்களும் ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் சொந்தமாக இடத்தை வாங்கி நிரந்தர வசிப்பிடத்தையும், அரசுப் பணியையும் பெறுவது எளிதானது. இந்தப் புதிய விதிகளின்படி 25,000-க்கும் மேற்பட்டோருக்கு நிரந்தர வசிப்பிட சான்றிதழ்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் தங்கள் கலாசாரம் மற்றும் மொழியியல் மரபுகளை நீர்த்துப்போகச் செய்துவிடுமோ என்கிற அச்சத்தை லடாக் மக்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது.
அதனால், 6-ஆவது அட்டவணை கோரிக்கை மூலம் தங்கள் தனித்துவத்தை இழக்காமல் தன்னாட்சி அதிகாரத்தைப் பெற விரும்புகின்றனர் லடாக் மக்கள். ஷரத்துகள் 244(2) மற்றும் 275(1)-இல் இடம்பெற்றுள்ள அரசமைப்புச் சட்டத்தின் ஆறாவது அட்டவணை பழங்குடியின நிர்வாகத்தைப் பாதுகாப்பதற்கான பர்தோலாய் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டது. பழங்குடியினர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளை நிர்வகிக்க தன்னாட்சி மாவட்ட கவுன்சில்களை (ஏடிசி) உருவாக்க இந்த ஆறாவது அட்டவணை வழிவகுக்கிறது. அஸ்ஸாம், மேகாலயம், மிஸோரம், திரிபுராவில் ஆறாவது அட்டவணையின் கீழ் மாவட்ட தன்னாட்சி கவுன்சில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கவுன்சிலில் 30 உறுப்பினர்கள் வரை இடம்பெற முடியும். ஐந்தாண்டு பதவிக் காலம் கொண்ட இந்த கவுன்சில் நிலம், வனம், குடிநீர், விவசாயம், கிராம கவுன்சில்கள், சுகாதாரம் தொடர்பாக சட்டங்கள், விதிமுறைகளை ஏற்படுத்த முடியும். குறிப்பாக, பழங்குடியினர் பகுதி நிலங்களை அந்தப் பகுதிக்குத் தொடர்பில்லாதவர்கள் வாங்குவதை சட்டப் பாதுகாப்பு மூலம் தடுக்க முடியும். வடகிழக்கு மாநிலங்களைத் தவிர வேறு எங்கும் எந்தப் பகுதியும் ஆறாவது அட்டவணையின் கீழ் சேர்க்கப்படவில்லை.
வடகிழக்குக்கு மட்டுமே ஆறாவது அட்டவணை என அரசமைப்புச் சட்டம் தெளிவாகக் கூறியிருப்பதால் லடாக்கை ஆறாவது அட்டவணையின் கீழ் சேர்ப்பது இயலாது என்பது மத்திய அரசின் வாதம். எனினும், மத்திய அரசு விரும்பினால் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடியும்.
லடாக் விவகாரத்தை சுமுகமாக கையாள வேண்டும் என மத்திய அரசு முடிவெடுத்திருப்பதன் விளைவுதான் சோனம் வாங்சுக் மீதான தேசியப் பாதுகாப்புச் சட்ட நடவடிக்கை ரத்து. மீண்டும் லடாக்கில் வன்முறை, போராட்டத்துக்கு இடமில்லை எனவும், பேச்சுவார்த்தைதான் பிரச்னைகளுக்குத் தீர்வு காண இருக்கும் வழிமுறை எனவும் லடாக் துணைநிலை ஆளுநர் வினய் குமார் தெரிவித்திருப்பதும் அதைத்தான் உணர்த்துகிறது. எல்லைப்புற மாநிலத்தில் அமைதி நிலவுவது அவசியம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...