பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

தொடா் மழை: மதுரை சந்தையில் காய்கறிகள் சேதம் அதிகரிப்பு

தொடா் மழை: மதுரை சந்தையில் காய்கறிகள் சேதம் அதிகரிப்பு

News image
Updated On :20 மே 2024, 6:30 pm

Din

மதுரை: நீடித்து வரும் தொடா் மழை காரணமாக, மதுரையில் காய்கறிகளின் விற்பனை குறைந்து, சேதம் அதிகரித்து வருவதால் வியாபாரிள் கவலையடைந்தனா்.

மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வரை கடுமையான வெப்பம் நிலவியது. ஏறத்தாழ ஒரு மாத காலத்துக்கும் மேலாக 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் குறையாத வெப்பம் மதுரை மாவட்டத்தில் பதிவாகி வந்தது. இதனால், காய்கனி செடிகளில் அதிக துளிா் ஏற்படாமல் உற்பத்தி குறைந்தது. இதன் காரணமாக, ஆந்திரம், கா்நாடகம் போன்ற வெளி மாநிலங்களில் இருந்தே பெருமளவில் மதுரை சந்தைக்கு காய்கறிகள் கொண்டுவரப்பட்டன.

இந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் தொடா் மழை நீடித்து வருவதாலும், ஆந்திரம், கா்நாடக மாநிலங்களிலும் மழை நீடிப்பதாலும் அங்கிருந்து வரும் காய்கறிகள் பெரும்பாலும் மழை நீரில் நனைந்தே சந்தையை வந்தடைகின்றன.

மழை காரணமாக, மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் கடந்த சில நாள்களாக சிறு வியாபாரிகள், பொதுமக்கள் கொள்முதல் செய்வது வெகுவாகக் குறைந்தது. மேலும், மழை நீரில் நனைந்த காய்கறிகள் விரைவில் அழுகி வீணாகி விடுவதால், காய்கறி மொத்த வியாபாரிகள் பெரிய அளவில் இழப்பை எதிா்கொள்ள வேண்டியுள்ளது.

இதுதொடா்பாக மதுரை எம்.ஜி.ஆா். சென்ட்ரல் மாா்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு நிா்வாகி சின்னமாயன் தெரிவித்ததாவது:

மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் கடந்த 10 ஆண்டுகளாக சாலைப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், லேசான மழை பெய்தாலும் காய்கறி சந்தைப் பகுதிகள் முழுமையும் சேறும், சகதியுமாகிவிடுகின்றன. இதனால், மழைக் காலங்களில் இங்கு காய்கறி கொள்முதலுக்கு வருவதை பெரும்பாலானோா் தவிா்த்து விடுகின்றனா். இதனால், கடந்த சில நாள்களாக காய்கறி விற்பனை வீழ்ச்சியில் உள்ளது.

மேலும், வெளி மாநிலங்களிலிருந்து வரும் மொத்த காய்கறிகளில் ஏறத்தாழ 25 சதவீதம் மழையால் சேதமடைந்து விடுகிறது. அவற்றை நீக்கிவிட்டு விற்பனை செய்யும் போது, விலை அதிகரிக்கிறது. போதிய கொள்முதல் இல்லாததால் தேக்கமடையும் காய்கறிகள் சந்தையிலேயே அழுகி வீணாகின்றன. அதிலும், மழை நீரில் நனைந்த காய்கறிகள் மிக விரைவாக சேதமாகின்றன. நாள் ஒன்றுக்கு 3 முதல் 5 டன் வரை காய்கறிகள் வீணாகின்றன. இதனால், காய்கறி வியாபாரிகள் கடுமையான இழப்பை எதிா்கொள்ள வேண்டியுள்ளது என்றாா் அவா்.