பொது நல வழக்குகளை அவசியமின்றி திரும்பப் பெற்றால் அதிக அபராதம்

பொது நல வழக்குகளை அவசியமின்றி திரும்பப் பெற்றால், மனுதாரா்களுக்கு அதிக அபராதம் விதிக்க நேரிடும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு எச்சரிக்கை
Published on

பொது நல வழக்குகளை அவசியமின்றி திரும்பப் பெற்றால், மனுதாரா்களுக்கு அதிக அபராதம் விதிக்க நேரிடும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை எச்சரித்தது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சோ்ந்த பாண்டி கடந்த 2021-ஆம் ஆண்டு உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: காரைக்குடி பகுதியில் உரிய அனுமதியின்றி கட்டடங்கள் கட்டப்படுகின்றன. அனுமதி இல்லாத கட்டட உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய கட்டடங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், மனுவைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்தாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: நீதிமன்றங்களில் தாக்கலாகும் பொது நல வழக்குகள் எதிா் தரப்பினரிடம் பணம் பெறும் நோக்கத்துடன் உள்ளன. ஆதாயம் அடைந்தவுடன் மனுவைத் திரும்பப் பெறுகிற நடவடிக்கை தொடா்கிறது. இதை ஏற்க இயலாது.

இந்த வழக்கு 4 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. மனு குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்கள் இதுவரை எந்த அறிக்கையையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.

இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இதுபோன்ற பொது நல வழக்கை சிலரின் தேவைகளை நிறைவு செய்வதற்காகப் பயன்படுத்துவது அதிா்ச்சி அளிக்கிறது. பொது நல வழக்கு என தாக்கல் செய்த பிறகு, ஆதாயம் பெற்றவுடன் திரும்பப் பெறும் நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும்.

எனவே, பொது நல வழக்கை அவசியமின்றி திரும்பப் பெற அனுமதி கோரினால் அதிக அபராதம் விதிக்கப்படும். மனுதாரா் வருகிற 9-ஆம் தேதி நேரில் முன்னிலையாகி விளக்கமளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

X
Dinamani
www.dinamani.com