கொலை வழக்கில் விடுதலையான குற்றவாளிக்கு ஆயுள் சிறை
கொலை வழக்கில் விடுதலையான குற்றவாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள கொண்டமநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சங்கையா மகள் சரண்யா (24). இவரும், உறவினரான தேனி பழனிசெட்டிபட்டி கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் சிவா என்பவரும் பழகி வந்தனா். இந்த நிலையில், சரண்யாவுக்கு வேறு நபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த சிவா கடந்த 2015-ஆம் ஆண்டு ஜன.22- ஆம் தேதி அதிகாலை சரண்யா வீட்டுக்குள் புகுந்து அவரை கத்தியால் குத்தினாா். இதில், பலத்த காயமடைந்த அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து சிவாவை கைது செய்து சிறையில் அடைத்தனா். இதுதொடா்பான வழக்கு தேனி கூடுதல் மாவட்ட அமா்வு விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதி விசாரணையின் போது, சிவாவை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிா்த்து தேனி மாவட்ட காவல் துறை சாா்பில், கடந்த 2021-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், எல்.விக்டோரியா கௌரி அமா்வு செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவு: விசாரணை நீதிமன்றம் அளித்த தீா்ப்பு ரத்து செய்யப்படுகிறது. காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் படி சிவா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. எனவே, அவருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
