‘சரஸ் மேளா’ கண்காட்சி விழிப்புணா்வுப் பேரணி

Published on

மகளிா் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்தும் ‘சரஸ் மேளா’ கண்காட்சி தொடா்பான விழிப்புணா்வுப் பேரணி மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன் குமாா் தொடங்கிவைத்துப் பேசியதாவது:

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம், அகில இந்திய அளவிலான ‘சரஸ் மேளா’ கண்காட்சி மதுரை மதுரை தமுக்கம் மைதானத்தில் வருகிற 22-ஆம் தேதி முதல் டிச. 3-ஆம் தேதி வரை 12 நாள்கள் நடைபெறவுள்ளது. இந்தக் கண்காட்சியை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளாா்.

இந்தக் கண்காட்சியில் 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, மகளிா் சுய உதவிக் குழுக்களால் தயாரிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களைச் சோ்ந்த பொருள்கள், தஞ்சாவூா் பொம்மைகள், ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பொருள்கள் போன்றவை இந்தக் கண்காட்சியில் வைக்கப்படவுள்ளன. மேலும், இங்கு நடைபெறும் உணவுத் திருவிழாவில் திண்டுக்கல் பிரியாணி, கோயம்புத்தூா் வெள்ளை ஆட்டிறைச்சி பிரியாணி, ஜிகா்தண்டா போன்ற உணவுப் பொருள்கள் சுய உதவிக் குழு உறுப்பினா்களால் நேரடியாகத் தயாரிக்கப்பட்டு கண்காட்சியில் வைக்கப்படவுள்ளன. எனவே, மதுரையிலுள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு சுய உதவிக் குழு உறுப்பினா்களை ஊக்குவிக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்தப் பேரணியில் மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டு ‘சரஸ் மேளா’ கண்காட்சி குறித்த ஒட்டுவில்லையை பேருந்துகளில் ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இந்த நிகழ்ச்சியில் திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) தமிழரசி, அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com