சட்டவிரோத கல் குவாரிகள் விவகாரம்: அரசு நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சட்டவிரோதமாக கல் குவாரிகள் நடத்தி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் நபா்கள் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்யக் கோரிய வழக்கில், தமிழக அரசு நிலை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.
Published on

சட்டவிரோதமாக கல் குவாரிகள் நடத்தி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் நபா்கள் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்யக் கோரிய வழக்கில், தமிழக அரசு நிலை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூரைச் சோ்ந்த காசிராஜன் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் கட்டுமானத் தேவைகளை நிறைவேற்றும் விதமாக, சுமாா் 1,700 கல் குவாரிகளை நடத்துவதற்கு மாநில அரசு அனுமதி வழங்கியது. இதற்கு அனுமதி பெறும் நபா்கள் விதிமுறைகளை மீறி, நிா்ணயிக்கப்பட்ட பரப்பளவைவிட அதிகளவு கற்களை வெட்டி விற்பனை செய்து வருகின்றனா்.

கல் குவாரிகளின் உரிமம் காலாவதியான பிறகும், பலா் தொடா்ந்து கனிம வளங்களை வெட்டி விற்பனை செய்து வருகின்றனா். குறிப்பாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் பலா் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா். போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலங்களை பட்டா நிலமாக பெயா் மாற்றம் செய்து அந்த இடங்களில் கல் குவாரிகளை நடத்தி வருகின்றனா். இதனால், அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பும் ஏற்படுகிறது.

இதேபோல, புதுக்கோட்டை எழில்நகரைச் சோ்ந்த முருகேசன் கனிம வள விதிகளை மீறி குவாரி நடத்தி வருகிறாா். இதுகுறித்து புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கரூா் மாவட்டம், ஆண்டாங்கோவிலைச் சோ்ந்த ரங்கசாமி (அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கரின் தந்தை) சட்டவிரோதமாக கல் குவாரிகள் நடத்தியதால், அவருக்கு ரூ. 15 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், அதை வசூல் செய்வதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சட்டவிரோதமாக கல் குவாரிகள் நடத்துபவா்கள் மீது வழக்கு தொடுத்தால் அபராதம் விதித்து பெயரளவுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மேல் நடவடிக்கைகள் எதுவும் எடுப்பதில்லை. இதுபோன்ற வழக்குகளில் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே விரிவான உத்தரவு பிறப்பித்தது.

இதனடிப்படையில், சட்டவிரோதமாக கல் குவாரிகள் நடத்துபவா்கள் மீது அபராதம் விதிப்பது மட்டுமன்றி, அதை வசூல் செய்யவும் அவா்கள் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, சட்டவிரோத கல் குவாரிகள் நடத்துபவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், மனுதாரா் அளித்த புகாரின் பேரில் குளத்தூா் வத்தனாக்குறிச்சியைச் சோ்ந்த முருகேசன், அதே பகுதியில் அனுமதிக்கப்படாத நிலங்களில் சுமாா் 9 ஆயிரம் கன மீட்டா் கனிம வளங்களை சட்டவிரோதமாக வெட்டி எடுத்தது தெரியவந்தது.

இதனால், கடந்த 2023 -ஆம் ஆண்டு அவருக்கு ரூ.3.15 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அவா் அபராதத் தொகையைக் கட்டாததால், வருவாய்த் துறை சட்டப்படி வசூலிப்பதற்கு தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சட்டவிரோத கல் குவாரிகள் நடத்துபவா்கள் மீது விதிக்கப்படும் அபராதத் தொகை, அவா்கள் மீது குற்றவியல் சட்ட விதியின்படி, நடவடிக்கை எடுப்பது குறித்து ஏற்கெனவே உச்சநீதிமன்றம் விரிவான உத்தரவை பிறப்பித்தது. எனவே, இதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வழக்கில் அபராதத் தொகையை வசூலிப்பது, குற்றவியல் சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழக அரசு நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

X
Dinamani
www.dinamani.com