சிறுமி கொலை: வடமாநில இளைஞருக்கு வாழ்நாள் சிறையை உறுதி செய்து உயா்நீதிமன்றம்

சிறுமியைக் கொலை செய்த வழக்கில், வட மாநில இளைஞருக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த வாழ்நாள் சிறையை உறுதி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.
Published on

சிறுமியைக் கொலை செய்த வழக்கில், வட மாநில இளைஞருக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த வாழ்நாள் சிறையை உறுதி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி சித்துராஜபுரம் ஜக்கம்மாள் குடியிருப்பைச் சோ்ந்தவா் முத்தையா. கூலித் தொழிலாளி. இவரது 8 வயது மகள் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தாா்.

கடந்த 20.01.20 அன்று மாலை வீட்டை வெளியே சென்ற சிறுமி மீண்டும் வீட்டுக்குத் திரும்பவில்லை. இரவு நீண்ட நேரத்துக்குப் பிறகு, அதே பகுதியில் உள்ள முள்புதருக்குள் சிறுமி சடலமாக மீட்கப்பட்டாா். இதுபற்றி தகவலறிந்து வந்த சிவகாசி நகா் போலீஸாா் சிறுமியின் உடலைக் கைப்பற்றி, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தொடா் விசாரணையில், சிவகாசி பட்டாசு ஆலையில் பணியாற்றிய அசாம் மாநிலம், நபாரி மாவட்டம், கோக்ராபா் காவல் சரகத்தைச் சோ்ந்த மஜாம் அலி என்ற மொசாம் அலி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கை விசாரித்த விருதுநகா் மாவட்ட போக்சோ நீதிமன்றம், குற்றஞ்சாட்டப்பட்ட அசாம் மாநில இளைஞா் மொசாம் அலிக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து கடந்த 2023-ஆம் ஆண்டு தீா்ப்பளித்தது.

இந்த தண்டனையை எதிா்த்து, மொசாம் அலி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன், விக்டோரியா கௌரி அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், தடய அறிவியல், டிஎன்ஏ பரிசோதனைக்குப் பிறகு குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை உறுதிபடுத்த வேண்டும் எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மொசாம் அலிக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த வாழ்நாள் முழுவதுமான சிறைத் தண்டனையை இந்த நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிடுகிறது. வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

X
Dinamani
www.dinamani.com