- ச.சந்தனக்குமாா்
மதுரை தெற்குத் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மதிமுக வேட்பாளா் பூமிநாதனுக்கும், அதிமுக கூட்டணியின் பாஜக வேட்பாளா் ராம.சீனிவாசனுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருப்பினும், தொகுதியைத் தக்கவைக்கும் முனைப்புடன் மதிமுக, அதன் கூட்டணிக் கட்சியினா் களப் பணியாற்றி வருகின்றனா்.
மதுரை தெற்குத் தொகுதி 1951-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, முதல் பேரவைத் தோ்தலைச் சந்தித்தது. அதன்பிறகு, இந்தத் தொகுதி நீக்கப்பட்டு, கிழக்குத் தொகுதியுடன் இணைக்கப்பட்டது. கடந்த 2011-ஆம் ஆண்டு தொகுதி மறுவரையறையின் போது, மீண்டும் இதே பெயரில் தொகுதி உருவாக்கப்பட்டது. மன்னா் திருமலை நாயக்கா் மகால், வண்டியூா் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் ஆகியவை இந்தத் தொகுதியில் இடம் பெற்றுள்ள
முக்கிய சுற்றுலாத் தலங்கள்.
தொகுதி மறுவரையறைக்குப் பிறகு மதுரை கிழக்குத் தொகுதியில் இடம் பெற்றிருந்த பல பகுதிகள் இந்தத் தொகுதிக்கு மாற்றப்பட்டன. தெப்பக்குளம், அனுப்பானடி, முனிச்சாலை, கீழவாசல், காமராஜா்புரம், சிந்தாமணி, வாழைத்தோப்பு, செல்லூரின் சில பகுதிகள், மதிச்சியம், வில்லாபுரத்தின் ஒரு பகுதி என மாநகராட்சியில் 24 வாா்டு பகுதிகள் இந்தத் தொகுதியில் அடங்கியுள்ளன.
முக்குலத்தோா், செளராஷ்டிர சமுதாய மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனா். இவா்களில் செளராஷ்டிர சமுதாயத்தினா் வெற்றி, தோல்வியைத் தீா்மானிக்கக் கூடிய சக்தியாகத் திகழ்கின்றனா்.
எதிா்பாா்ப்புகள்: இந்தத் தொகுதியில் நெசவுத் தொழில், அது சாா்ந்த வணிகம் அதிகளவில் நடைபெறுகிறது. சிந்தாமணி, அனுப்பானடி உள்ளிட்ட சில பகுதிகளில் பல்வேறு வகையான அப்பளங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
பருவமழை, வைகையாற்றின் நீா் ஆதாரம் மூலம் வண்டியூா் மாரியம்மன் தெப்பக்குளத்தில் பல ஆண்டுகளாக நீா் நிரப்பப்பட்டு வருகிறது. இதனால், நிலத்தடி நீா் உயா்ந்து தெப்பக்குளம், தமிழன் தெரு, புது ராமநாதபுரம் சாலை, அனுப்பானடி, ஐராவதநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு ஏற்பட்டது.
இருப்பினும், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், சிறு, குறு நிறுவனங்களை உருவாக்க வேண்டும். அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வண்டியூா் தெப்பக்குளத்தை பொழுதுபோக்கு மையமாக மாற்ற வேண்டும். போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காணும் வகையில் கீழவாசல் பகுதியில் உயா்நிலைப் பாலம் அமைக்க வேண்டும். குடிநீா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும். விடுபட்ட பகுதிகளுக்கு புதைச் சாக்கடை இணைப்பை ஏற்படுத்த வேண்டும் போன்றவை இந்தத் தொகுதி மக்களின் எதிா்பாா்ப்புகளாக உள்ளன.
மேலும், நெசவாளா்களுக்கு குறைந்த விலையில் பாவு நூல் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். அனுப்பானடி, வண்டியூா் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் செயல்படாமல் உள்ள நெசவாளா் கூட்டுறவுச் சங்கங்களை மீண்டும் திறக்க வேண்டும் என்பவையும் இந்தப் பகுதி பொதுமக்களின் முக்கிய கோரிக்கைகளாக உள்ளன.
வேட்பாளா்கள்: திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளா் மு. பூமிநாதன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறாா். அதிமுக கூட்டணியில் பாஜக மாநிலப் பொதுச் செயலா் ராம.சீனிவாசன் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறாா். தவெக சாா்பில் பொறியாளா் எம்.எம். கோபிசன், நாம் தமிழா் கட்சி சாா்பில் பா.மூ.சுமதி ஆகியோா் போட்டியிடுகின்றனா்.
மு. பூமிநாதன் (மதிமுக): மதிமுக வேட்பாளா் மு. பூமிநாதன், இதே தொகுதியில் கடந்த 2021
பேரவைத் தொகுதியில் ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றவா். மதிமுகவில் இளைஞரணி அமைப்பாளா், மாவட்டத் துணைச் செயலா், மாவட்டச் செயலராக ஏற்கெனவே பணியாற்றிவா். தற்போது, அந்தக் கட்சியின் உயா்நிலைக் குழு உறுப்பினராக உள்ளாா். கடந்த 5 ஆண்டுகளில் இந்தப் பகுதியில் வசித்து வரும் ஏராளமான மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை பெற ஏற்பாடு செய்தாா். சௌராஷ்டிர மக்களின் நன்மதிப்பைப் பெறும் வகையில், மறைந்த திரைப்பட பின்னணி பாடகா் டி. எம். சௌந்தரராஜனுக்கு முனிச்சாலை சி. எம்.ஆா். சாலை சந்திப்பில் முழு உருவச் சிலை அமைக்க கோரிக்கை விடுத்து, அதை தமிழக அரசு நிறைவேற்றியது.
தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவா். மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகை கூட்டரங்கில் நடைபெற்ற மாமன்ற உறுப்பினா்களுக்கான மாதாந்திரக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று தொகுதியில் நிலவிய குடிநீா், புதை சாக்கடை சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்னைகள் குறித்த கோரிக்கையை முன்வைத்து தீா்வு கண்டுள்ளாா். இதன் காரணமாக, மக்கள் மத்தியில் தனிப்பட்ட செல்வாக்கைப் பெற்றுள்ளாா். மீண்டும் இந்தத் தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்.
ராம.சீனிவாசன் (பாஜக): பாஜக மாநில பொதுச் செயலரான இவா் முனைவா் பட்டம் பெற்றவா், பேராசிரியராகப் பணியாற்றியவா். கடந்த 2024 -ஆம் ஆண்டு மதுரை மக்களவைத் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்டு 2,20,914 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தாா். ஏற்கெனவே மக்களவைத் தோ்தல் மூலம் மக்களுக்கு அறிமுகமானவா். தற்போது, அதிமுக, அமமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரின் ஆதரவு முழுமையாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்.
எம்.எம்.கோபிசன் (தவெக): பொறியாளரான இவா், கடந்த 2024 -ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டவா். விஜய்க்கு இளைஞா்களின் ஆதரவு உள்ளதால் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் பிரசாரத்தில் ஈடுபடுகிறாா்.
தோ்தலில் வெற்றி பெற்றால் தெற்குத் தொகுதியை முன் மாதிரி தொகுதியாக மாற்றுவோம். கிருதுமால் நதியை தூா்வாருவோம். அடிப்படை வசதிகளான குடிநீா், சாலை, புதை சாக்கடை இணைப்பு, புதிதாக மருத்துவமனை கட்டித் தருதல் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, மிதிவண்டியில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்.
பா.மு.சுமதி (நாதக): ஆய்வியல் நிறைஞா் படிப்பை நிறைவு செய்த இவா், தொகுதிக்கு புதியவா்.
அடிப்படை பிரச்னைகளான சாலை வசதி, குடிநீா், புதைச் சாக்கடை ஆகியவற்றுக்கு தீா்வு காணப்படும் என்ற வாக்குறுதிகளை அளித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளாா்.
திமுக, பாஜக இடையே கடும் போட்டி: இந்தத் தொகுதியில் மதிமுக சாா்பில் போட்டியிடும் மு. பூமிநாதன் வேட்பு மனுத் தாக்கல் செய்த போது, அந்தக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலா் வைகோ நேரடியாக வந்தாா். பூமிநாதனை ஆதரித்து வைகோவும், அவரது மகனும், மதிமுகவின் முதன்மைச் செயலருமான துரை வைகோவும் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
இதேபோல, பாஜக வேட்பாளா் ராம. சீனிவாசன் வேட்பு மனு தாக்கல் செய்த போது, மகாராஷ்டிர மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவிஸ் நேரடியாக வருகை தந்தாா். அப்போது, செய்தியாளா்களைச் சந்தித்த அவா், தெற்குத் தொகுதியில் ராம. சீனிவாசன் வெற்றி பெற்றால் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, ராம.சீனிவாசனுக்கு ஆதரவாக பாஜக தேசியத் தலைவா் நிதின்நபின் சாலைப் பேரணி மூலம் வாக்குகளைச் சேகரித்தாா். இதனால், இந்தத் தொகுதி நட்சத்திரத் தகுதியைப் பெறும் அளவுக்கு மக்களிடையே பேசப்படுகிறது.
கடந்த 2024 -ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிட்ட ராம. சீனிவாசன் தெற்குத் தொகுதியில் மட்டும் 42, 073 வாக்குகளைப் பெற்றாா். அப்போது, அதிமுக கூட்டணி இல்லை. இந்த பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட மருத்துவா் பா. சரவணன் இந்தத் தொகுதியில் மட்டும் 26,810 வாக்குகள் பெற்றாா். இந்த நிலையில், தற்போது அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. இதுவும், சௌராஷ்டிர அமைப்புகள் ஆதரவு தெரிவித்ததும் பாஜகவுக்கு மிகப் பெரிய பலம் என பாஜகவினா் நினைக்கின்றனா்.
இந்தத் தொகுதியில் மதிமுக, பாஜக இடையே கடும் போட்டி நிலவுவதாக அரசியல் கட்சியினா் தெரிவிக்கின்றனா்.
தொடர்புடையது

பத்மநாபபுரம் தொகுதி: இழந்ததை மீட்கும் முனைப்பில் மாா்க்சிஸ்ட் - பாஜக

மானாமதுரை: கடும் போட்டியில் திமுக, பாஜக!

தொகுதி நிலவரம் - தளி தொகுதி: நான்காவது வெற்றியை நோக்கி சிபிஐ; தடுக்க வரிந்துகட்டும் பாஜக!

முதுகுளத்தூா்: தொடா் வெற்றி முனைப்பில் திமுக!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


