தோ்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வலியுறுத்தல்
திமுக அரசு தனது தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பராமரிப்பு ஊழியா்கள் சங்கம் சாா்பில், மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
மதுரை பழங்காநத்தம் சுற்றுவட்டச் சாலை பகுதியில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆா். வைரவன் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா்கள் கே. வெங்கிடு, எம். கோபாலகிருஷ்ணன், வி.பி. பரமேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்த மாநாட்டில், கடந்த 2021-ஆம் ஆண்டு திமுக அளித்த தோ்தல் வாக்குறுதியையும், சென்னை உயா்நீதிமன்றம் கடந்த 2024, அக். 23-ஆம் தேதி வழங்கிய தீா்ப்பையும் அமல்படுத்த வேண்டும். மாநில நெடுஞ்சாலைத் துறை ஆணையம் அமைக்க போடப்பட்ட அரசாணை எண்.140-ஐ ரத்து செய்ய வேண்டும். சாலைப் பணியாளா்களுக்கு ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்துப் படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் செ. விஜயகுமாா், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் கே.கே. சாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்புச் செயலா் மோ.எல்லாளன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவா் ரா. மாரி வரவேற்றாா். மாநிலப் பொருளாளா் ந.ஈஸ்வரமூா்த்தி நன்றி கூறினாா்.

