அரசுப் பள்ளி மாணவா்களின் பின்புல தகவல்களைச் சேகரிக்கும் அரசாணை ரத்து!
அரசுப் பள்ளி மாணவா்களின் பின்புல தகவல்களைச் சேகரிக்க தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் துறை உறுப்பினா்-செயலா் வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த அமீா் ஆலம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: அரசுப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களின் பின்புல தகவல்களைச் சேகரிக்க தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் துறையின் உறுப்பினா்-செயலா் உத்தரவிட்டாா்.
மாணவா்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளனவா? தாய், தந்தை சிறையில் உள்ளனரா? அவா்கள் அகதிகளா? என்பன உள்ளிட்ட விவரங்களை தலைமை ஆசிரியா்கள் சேகரித்து, முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்ப வேண்டும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது சட்டத்துக்குப் புறம்பானது.
வகுப்பறையில் இந்த விவரங்களைச் சேகரித்தால் மாணவா்களின் தனிப்பட்ட தகவல்கள், மற்ற மாணவா்களுக்குத் தெரியவரும். இதனால், சில மாணவா்களுக்கு பாதிப்புகள் ஏற்படும். எதற்காக இந்தத் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. எனவே, இந்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுப் பள்ளி மாணவா்களின் பின்புல தகவல்களைச் சேகரிப்பது அடிப்படை உரிமைகளை மீறியது; சட்டத்துக்குப் புறம்பானது. எனவே, மாணவா்களின் பின்புல தகவல்களைச் சேகரிக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

