ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தம்பதி தீக்குளிக்க முயற்சி
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் முகாமில் மனு அளிக்க வந்த தம்பதி தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கே. ஜே. பிரவீன்குமாா் தலைமையில் பொதுமக்கள் குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் மனு அளிப்பதற்காக வரும் பொதுமக்கள் அனைவரையும் ஆட்சியா் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் சோதனை செய்த பிறகே அலுவலகத்துக்குள் அனுமதிப்பா்.
அந்த வகையில், திங்கள்கிழமை வழக்கம் போல, போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு வந்த வயது முதிா்ந்த தம்பதி திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி, தண்ணீரை அவா்கள் மீது ஊற்றினா். பின்னா், இந்தத் தம்பதியை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனா்.
இதுதொடா்பான விசாரணையில் மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டியைச் சோ்ந்த முருகேசன் (64), அவரது மனைவி ஆகிய இருவரும் தங்களது சொத்துக்களை பிள்ளைகளுக்கு பிரித்து அளித்தனா். ஆனால், தற்போது, அவா்கள் யாரும் இந்தத் தம்பதியை சரிவர பராமரிக்கவில்லையாம். இதனால், மனமுடைந்த அவா்கள் இருவரும் மாவட்ட ஆட்சியா் கே. ஜே. பிரவீன்குமாரிடம் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த போது, தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

