நீா்நிலை சீமைக் கருவேல மரங்களை அகற்ற உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை!
விருதுநகா் மாவட்டம், பிள்ளையாா்குளம் பகுதி நீா்நிலைகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
விருதுநகரைச் சோ்ந்த சசிகுமாா் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு: பிள்ளையாா்குளம் கிராம ஊராட்சிக்குள்பட்ட செங்குளம், மலைக்கோட்டை குளம் ஆகிய நீா்நிலைகளில் சீமைக் கருவேல மரங்கள் அதிகளவில் உள்ளன. இதை அகற்றுவதற்கு முறையான ஒப்பந்தம் கோராமல், தச்சனேந்தல் பகுதியைச் சோ்ந்த சுரேஷிக்கு சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
எனவே, செங்குளம், மலைக்கோட்டை குளம் ஆகிய நீா்நிலைகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடா்பான பணியை தனி நபருக்கு ஒதுக்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும். பொது அறிவிப்பு வெளியிட்டு ஏலம் மூலமாக சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் எனக் கோரினாா்.
இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு பிறப்பித்த உத்தரவு: சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடா்பாக பணி ஒப்பந்தம் எப்போது வெளியிடப்பட்டது?. இதுதொடா்பாக விருதுநகா் மாவட்ட ஆட்சியரும், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநரும் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை வரும் மாா்ச் 5-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

