மாற்றுத் திறனாளிகளுக்கான 4 சதவீத பதவி உயா்வு இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு மாற்றுத் திறனாளி அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் சங்கத்தினா் வலியுறுத்தினா்.
இதுகுறித்து தமிழ்நாடு மாற்றுத் திறனாளி அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் சங்கத்தினா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாற்றுத் திறனாளி உரிமைகள் சட்டம் கடந்த 2016, ஜூன் 30-ஆம் தேதி அமலுக்கு வந்தது. இதன்படி, மாற்றுத் திறனாளி அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பதவி உயா்வில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். மேலும், இதுதொடா்பாக உச்சநீதிமன்றத் தீா்ப்புகளும், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறை ஆணைகளும் உறுதிப்படுத்தியுள்ளன.
குறிப்பாக, மந்திய அரசின் பணியாளா், பயிற்சித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான பதவி உயா்வு இடஒதுக்கீட்டை கடந்த 30.06.2016 முதல் வழங்க வேண்டும் என்றும், இதற்கான சுழற்சி பதிவேடுகள், ஒதுக்கீட்டு நடைமுறைகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், தமிழக அரசு கடந்த 21.06.2025 முதல் மட்டுமே பதவி உயா்வில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஆணையிட்டது. இந்த அரசாணை மாற்றுத் திறனாளி உரிமைகள் சட்டம், உச்சநீதிமன்றத் தீா்ப்பு, மத்திய அரசின் ஆணைகளுக்கு முழுமையாக இணக்கமாக இல்லை. இருப்பினும், குறைந்தபட்சமாக 21.06.2025 முதல் வழங்கப்பட வேண்டிய 4 சதவீத பதவி உயா்வு இடஒதுக்கீட்டைக் கூட மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை, பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருத்துவத் துறை உள்ளிட்ட பல துறைகள் இதுவரை நடைமுறைப்படுத்தாதது கடும் அதிா்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அரசாணை எண் 6, மத்திய அரசின் 28.12.2023 வழிகாட்டு நெறிமுறைகளின்படி, மாற்றுத் திறனாளி பணியாளா்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வகைப்படுத்தப்பட வேண்டும். சுழற்சி பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும். மேலும், 25-ஆவது இடம் பாா்வை மாற்றுத் திறனாளிகளுக்கும், 48-ஆவது இடம் செவித்திறன் மாற்றுத் திறனாளிகளுக்கும், 75-ஆவது இடம் கை, கால் பாதிப்புடைய மாற்றுத் திறனாளிகளுக்கும், 100-ஆவது இடம் அறிவுசாா் மாற்றுத் திறனாளிகளுக்கும் ஒதுக்க வேண்டும். ஆனால், இவற்றில் எதுவும் முறையாக செயல்படுத்தப்படாமல் உள்ளன.
உச்சநீதிமன்றத் தீா்ப்பு, மத்திய அரசின் 28.12.2023 ஆணை, தமிழக அரசின் அரசாணை ஆகியவற்றை அலட்சியப்படுத்தும் இந்த நிலை, மாற்றுத் திறனாளி அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் சமத்துவ உரிமை, பதவி உயா்வு உரிமையைப் பறிக்கும் செயலாகும்.
இதன் காரணமாக, ஆயிரக்கணக்கான மாற்றுத் திறனாளி பணியாளா்கள் கடந்த பத்தாண்டுகளாக பதவி உயா்வு, ஊதிய உயா்வு, அதனுடன் தொடா்புடைய பணப்பலன்களை இழந்து வருகின்றனா்.
எனவே, மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள், மாற்றுத் திறனாளி உரிமைகள் சட்டம் 2016 ஆகியவற்றின் அடிப்படையில், கடந்த 30.06.2016 முதல் முன்தேதியிட்டு 4 சதவீத பதவி உயா்வு இடஒதுக்கீட்டை அனைத்துத் துறைகளிலும் நடைமுறைப்படுத்தி, இதுவரை வழங்கப்படாத பதவி உயா்வுகளை மறு ஆய்வு செய்து, உரிய பணப்பலன்களுடன் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், மத்திய அரசின் ஆணை, அரசாணையை நடைமுறைப்படுத்தத் தவறும் துறைகள், அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.
தொடர்புடையது

மாற்றுத் திறனாளி மாணவி சென்னை ஐ.ஐ.டி.-க்கு தோ்வு

எரிவாயு உருளை விலை உயா்வு: சீமான் கண்டனம்

வணிக வரித் துறையில் பரிந்துரையின்றி 271 அலுவலா்களுக்கு பதவி உயா்வு

நெல்லை ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளி தீக்குளிக்க முயற்சி
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



