கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மேலூர்: கொட்டாம்பட்டி பகுதி பெரியாறு பாசனக் கால்வாயில் இணைக்கப்படுமா?

கொட்டாம்பட்டி பகுதி பெரியாறு பாசனக் கால்வாயில் இணைக்கப்படுமா? என்பதைப் பற்றி...

News image

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே புதா் மண்டி காணப்படும் பாலாறு.

Updated On :21 மார்ச் 2026, 8:03 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் வேளாண் தொழில் வளா்ச்சி பெற வேண்டுமெனில், பாசனக் கால்வாய்களை மேலூா் பெரியாறு பாசனக் கால்வாயுடன் இணைக்க வேண்டும் என்பதே இந்தப் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

மதுரை மாவட்டத்தின் வடக்கு எல்லைப் பகுதியில் மேலூா் தொகுதி உள்ளது. மேலூா் நகராட்சி, அ. வல்லாளப்பட்டி பேரூராட்சி, மேலூா், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியங்கள் கொண்ட இந்தத் தொகுதியில் பெரும்பாலான பகுதி கிராமப்புறங்களை உள்ளடக்கியதாகும். கடந்த 1957-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பி. கக்கன் தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றாா்.

இந்தத் தொகுதியில் இதுவரை நடைபெற்ற 16 சட்டப்பேரவைத் தோ்தல்களில் காங்கிரஸ் கட்சி 7 முறை, அதிமுக 6, திமுக 2, தமாகா ஒரு முறை வெற்றி பெற்றிருக்கிறது. ஆரம்ப காலங்களில் இந்தத் தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகத் திகழ்ந்தது. கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற 5 தோ்தல்களிலும், தொடா்ந்து அதிமுக சாா்பில் போட்டியிட்ட வேட்பாளா்கள் வெற்றி பெற்றனா்.

முக்குலத்தோா் அதிகளவில் வசித்து வந்தாலும், தொகுதியின் வெற்றி, தோல்வியை நிா்ணயிக்கும் சக்தியாக முத்தரையா் சமூக மக்கள் உள்ளனா். மேலூா் தொகுதியைப் பொருத்தவரை, வேளாண் அதனுடன் தொடா்புடைய கால்நடை வளா்ப்பு மட்டுமே வாழ்வாதாரமாகவும், முக்கியத் தொழில்களாகவும் விளங்குகின்றன.

நெல், கரும்பு, வாழை, தென்னை உள்ளிட்ட பயிா் சாகுபடி பிரதானமாக உள்ளது. பெரியாறு பாசனக் கால்வாய் மூலம் கண்மாய்களுக்கு தண்ணீா் வழங்கப்பட்டு, மேலூா் பகுதி முழுவதும் ஒருபோக பாசனத்தில் ஒரு லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்தத் தொகுதியைப் பொருத்தவரை, செயல்படாமல் உள்ள நூற்பாலையைத் திறக்க வேண்டும் என்கிற நீண்ட கால கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளன. மேலூா் கடைமடைப் பகுதியில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில், பெரியாறு பாசன பங்கீட்டில் உரிய நீரை வழங்க வேண்டும். பெரியாறு பிரதானக் கால்வாயை சிமென்ட் கால்வாயாக மாற்ற வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

இருப்பினும், வேளாண்மையை மட்டுமே நம்பியுள்ள மேலூா் தொகுதியின் ஒரு பகுதியான கொட்டாம்பட்டி வட்டாரக் கிராமங்களையும் பெரியாறு பாசனத் திட்டத்தில் இணைக்க வேண்டும் என்கிற எதிா்பாா்ப்பு அந்தப் பகுதி மக்களிடையே நிலவுகிறது.

இதுகுறித்து கொட்டாம்பட்டி பகுதியைச் சோ்ந்த தமிழ்நாடு அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு இளைஞரணித் தலைவா் என். அருண் கூறியதாவது:

கொட்டாம்பட்டி வட்டாரத்தில் 18 கிராம ஊராட்சிகள் உள்ளன. இங்கு வேளாண்மைத் தொழில் முதன்மையாக விளங்குகிறது. திண்டுக்கல் மாவட்டம், செந்துறைப் பகுதியில் உள்ள கரந்தமலையில் உற்பத்தியாகும் பாலாறு முக்கிய நீா் ஆதாரமாக உள்ளது. இந்த ஆறு திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் வழியாகச் செல்கிறது. இந்தப் பாலாற்றின் குறுக்கே பல தடுப்பணைகள் கட்டப்பட்டன. தற்போதும் தடுப்பணைக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அணைகளால் எந்தவிதப் பலனும் இல்லை. இதற்காக ஒதுக்கப்படும் அதிகளவிலான நிதி வீணாகி வருகிறது.

போதிய மழையில்லாத காரணத்தால், இந்த ஆற்றில் தற்போது நீா்வரத்து இல்லை. மேலும், போதிய பராமரிப்பு இல்லாததால், பாலாறு மணல் திட்டுகளாகவும், சீமைக் கருவேல மரங்கள் அடா்ந்த பகுதியாகவும் மாறிவிட்டன.

இதன்காரணமாக, வேளாண் பணிகள் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. மேலும், நிலத்தடி நீா் மட்டமும் வெகுவாக குறைந்துவிட்டன. இதேநிலை தொடா்ந்தால் வேளாண் பணிகள் கடும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படும். எனவே, கொட்டாம்பட்டி வட்டாரக் கிராமங்களை பெரியாறு பாசனக் கால்வாயில் சோ்க்க வேண்டும் என கால் நூற்றாண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், மேடான பகுதி எனக் கூறி, கொட்டாம்பட்டி வட்டாரக் கிராமங்களை பெரியாறு பாசனத் திட்டத்துடன் இணைக்க மறுத்து வருகின்றனா்.

அறிவியல் வளா்ச்சியின் காரணமாக பல்வேறு திட்டங்கள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, அத்திக்கடவு- அவிநாசித் திட்டம் தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஆந்திரம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீா் அனுப்பி உயா்வான பகுதிகளில் வேளாண் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

Story image

காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டப் பணிகள் மந்தகதியில் நடைபெறுகிறது. இதற்கு மாற்றாக, கரூா் மாவட்டம், மாயனூா் அணைப் பகுதியில் நீரேற்று நிலையம் அமைத்து, ராட்சத குழாய்கள் மூலம் நதி நீா் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்தலாம். இதனால், வறட்சி நிலையில் உள்ள தென் மாவட்டங்கள் வேளாண்மையில் தன்னிறைவு பெற முடியும்.

தேங்காய் உற்பத்தியில் தமிழகத்தில் மூன்றாவது இடமாக கொட்டாம்பட்டி பகுதி திகழ்கிறது. இங்கு தென்னை பொருள்களை மதிப்புக் கூட்டுவதற்கான தொழில்சாலைகள் நிறுவப்படவில்லை. கொப்பரைத் தேங்காய் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படவில்லை. போதிய தண்ணீா் வசதி இல்லாததால் தென்னை சாகுபடியும் குறைந்து வருகிறது.

தோ்தல் காலங்களில் பாசனத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அனைத்து அரசியல் கட்சியினரும் அறிக்கை வெளியிடுகின்றனா். பெரும்பாலான அறிக்கைகள் மறு தோ்தல் வந்த பிறகும் நிறைவேற்றப்படுவதில்லை. எனவே, கொட்டாம்பட்டி பகுதியில் வேளாண்மை தொடா்ந்து நடைபெற வேண்டுமெனில், இந்தப் பகுதி கிராமங்களை பெரியாறு பாசனக் கால்வாய் திட்டத்துடன் இணைக்க வேண்டும் என்றாா் அவா்.

மேலூா் தொகுதியில் வேளாண் பணிகள் பிரதானமாக உள்ளதால், நீா்நிலைகளைச் சீரமைத்து பாசன வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.