தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

85 ஆண்டுகளாகியும் தரம் உயர்த்தப்படாத நடுநிலைப் பள்ளி

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு வட்டாரம் விருவீடு அருகேயுள்ள வலையபட்டியில், வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 85 ஆண்டுகளாகியும் தரம் உயர்த்தப்படாமல் உள்ளது

News image
Updated On :6 ஜூலை 2017, 1:43 am

என். சரவணன்

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு வட்டாரம் விருவீடு அருகேயுள்ள வலையபட்டியில், வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 85 ஆண்டுகளாகியும் தரம் உயர்த்தப்படாமல் உள்ளது.
இப்பள்ளியானது, கடந்த  2.4.1932 ஆம் ஆண்டில் சந்தையூர், தெற்கு வலையபட்டி, வடக்கு வலையபட்டி, தெப்பத்துப்பட்டி, ராஜதானியக்கோட்டை, கீழத்தெப்பத்துப்பட்டி, குன்னத்துப்பட்டி உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையமாக  வலையபட்டியில் (வடக்கு வலையபட்டி) துவக்கப் பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டது. பின்னர், 1962 ஆம் ஆண்டில் நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. அதையடுத்து, இப்பள்ளி மேலும், தரம் உயர்த்தப்பட வில்லை.
    தற்போது, இப்பள்ளியில் 245 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியை மற்றும் பகுதி நேர ஆசிரியை ஒருவர் என மொத்தம் 10 பேர் பணியில் உள்ளனர். கடந்த 2012-இல் நடந்த பேருந்து விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, இப்பள்ளியை தரம் உயர்த்தக் கோரி, வலையபட்டி கிராம மக்கள் மற்றும் அப்போதைய சந்தையூர் ஊராட்சித் தலைவர் ஜெயலெட்சுமி விக்ரமன் ஆகியோரது பங்களிப்புடன், ரூ. 1 லட்சம் வசூல் செய்து நிலக்கோட்டை சார்-கருவூலத்தில் ,கட்டணமாகச் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை பள்ளி கட்டுவதற்கு இடம் மட்டும் கிடைக்கவில்லையாம்.
    பள்ளியின் தரம் உயர்த்தப்படாததால், இப்பகுதியில் உள்ள மாணவர்கள் வெளியூரிலும், மாணவிகள் பள்ளிப் படிப்பை 8 ஆம் வகுப்புடன் முடித்துக் கொண்டு, நூற்பாலைக்குச் செல்லும் நிலை நீடிக்கிறது.
இது குறித்து அப்பள்ளித் தலைமை ஆசிரியை மணிமேகலை கூறியது: பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைகாக சக ஆசிரியர்கள் பங்களிப்போடு சுற்றுப் பகுதியில் உள்ள கிராமங்களுக்குச் சென்று, பெற்றோர்களிடம் கூறி  அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை சேர்த்துள்ளோம்.
  பள்ளியின் தரத்தை உயர்த்தி, கட்டடம் கட்ட 3 ஏக்கர் நிலம் தேவை. இரண்டு ஏக்கர் கூட போதுமானது. ஆனால், இதுவரை இடம் கிடைக்கவில்லை. இது குறித்து இப்பகுதி மக்களிடம் போதிய ஆர்வம் இல்லை. பள்ளித் தரம் உயர்ந்தால் இப்பகுதி மாணவர்கள் பயனடைவர் எனறார்.
     இது குறித்து உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ராஜம் எஸ்தர் தெரிவிக்கையில், பள்ளி கட்டுவதற்கான இடம் கொடுத்தால் கண்டிப்பாக பள்ளியின் தரம் உயர்த்தபடும் என்றார்.
முன்னாள் சந்தையூர் ஊராட்சித் தலைவர் ஜெயலெட்சுமி விக்ரமன் கூறுகையில், உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்துவதற்கு சார்-கருவூலத்தில் பணம் செலுத்தப்பட்டு விட்டது. மேலும், தெற்கு வலையபட்டியில் பள்ளி கட்டடம் கட்ட ஒரு ஏக்கர் இடம் தேர்வு செய்து கொடுத்துள்ளோம்.
ஆனால், என்ன காரணத்தாலோ பள்ளி கட்டடம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை என்றார்.
இந்த சுற்று வட்டாரத்திலேயே பழமையான இப்பள்ளி இன்னும் தரம் உயர்த்தப்படாமல் உள்ளதால், மாணவர்கள் தொலைவான பகுதிகளுக்குச் சென்று படித்து வருவதுடன்,  பெண்களின் கல்வி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.