பழனியில் தவத்திரு சாது சுவாமிகளின் 67 ஆவது குருவழிபாட்டுப் பெருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பழனி தெற்கு கிரி வீதியில் தவத்திரு சாது சுவாமிகளின் சமாதி திருக்கோயில் வளாகம் உள்ளது. விஞ்ச் நிலையம் அருகே சாது திருமடம் சார்பில், ஆண்டு முழுவதும் அன்னதானம் நடைபெறுகிறது.
திருக்கோயில் வளாகத்தில், சாது சுவாமிகளின் 67 ஆவது குருவழிபாட்டுப் பெருவிழா கடந்த வெள்ளிக்கிழமை விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. 5 நாள்கள் நடைபெற்ற விழாவின்போது, தினமும் வேள்வி, நூறாயிரம் பரவுதல், பேரொளி வழிபாடு மற்றும் திருமுறை விண்ணப்பம் ஆகியன தவத்திரு சாது சண்முக அடிகளார் தலைமையில் நடைபெற்றன.
தினமும் காலையில் ஓதுவாமூர்த்திகளின் பாடல்கள், பல்வேறு கருத்தாளர்கள், முனைவர்கள் பங்கேற்ற சிலப்பதிகாரக் கருத்தரங்கம் மற்றும் சித்த மருத்துவக் கருத்தரங்கம் ஆகியனவும் நடைபெற்றன.
விழாவை முன்னிட்டு, சமய, இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவுக் கேடயம், பரிசுகளை அமரபூண்டி சரசுவதி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சந்திரசேகர், மடத்தின் மேலாளர் முனைவர் அருள்ஞானசம்பந்தம் ஆகியோர் வழங்கினர்.
செவ்வாய்க்கிழமை நிறைவு நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு, காலையில் மடத்தின் முன்பு அருள்மிகு நந்தியம்பெருமான் கொடியும், பெருந்திருமஞ்சனத்தைத் தொடர்ந்து அன்னதான சமாஜத்தின் முன்பு அன்னதானக் கொடியும் ஏற்றப்பட்டது. பின்னர், அன்னபூரணி வழிபாடு, மாகேசுர வழிபாடு நடத்தப்பட்டது.
பக்தர்களுக்காக மூலிகைக் கண்காட்சி மற்றும் விற்பனையும் நடைபெற்றது. மாலையில் நடைபெற்ற சிறப்புச்சொற்பொழிவு நிகழ்ச்சியில், கோவை சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகளார், பேரூர் இளையபட்டம் மருதாசல அடிகளார், வரன்பாளையம் சிவாச்சல அடிகளார் மற்றும் தென்சேரிமலை முத்துசிவராமசாமி அடிகளார், முன்னாள் காவல்துறைக் கண்காணிப்பாளர் சுப்பிரமணியம், புதுக்கோட்டை பாவாணன் உள்ளிட்டோர் பங்கேற்று ஆன்மிக உரை நிகழ்த்தினர்.
இரவு சாது சுவாமிகளின் உருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, கிரிவீதி உலா நடத்தப்பட்டு, கொலு வழிபாட்டுடன் நிறைவு பெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.