பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சார்பில் சுதந்திர தினவிழாவையொட்டி புதன்கிழமை அன்னதான பொதுவிருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கோயில் இணை ஆணையர் செல்வராஜ் தலைமை வகித்தார். இதில், சிறப்பு பூஜை, இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வடை, பாயாசம், மூன்று வகை பொறியல், அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.
பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி, பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி என்.எஸ்.எஸ். என்.சி.சி., மாணவர்கள் இப்பணியை மேற்கொண்டனர்.
பின்னர், ஆதரவற்ற முதியோர்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் டிஎஸ்பி., விவேகானந்தன், சித்தனாதன் சன்ஸ் பழனிவேலு, திருப்பூர் லாட்ஜ் மகேஷ், அதிமுக நகர செயலாளர் முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.