சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் முற்றுகை

பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி, குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :25 மே 2018, 5:22 am IST

பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி, குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். அப்போது, பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை இழப்பீட்டுத் தொகை கிடைக்காத தொப்பம்பட்டி வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள், ஆட்சியரை முற்றுகையிட்டு கோரிக்கையை வலியுறுத்தினர்.
இந்த முற்றுகைப் போராட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கே. முகமது அலி தலைமை வகித்து பேசியதாவது: மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரிலேயே பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் இணைந்துள்ளனர். கடந்த 2016-17 நிதியாண்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் 39ஆயிரம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திருந்த நிலையில், வறட்சியால் மகசூல் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், தற்போது வரை 4ஆயிரம் விவசாயிகளுக்கு மட்டுமே இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும், இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கான முகாந்திரம் இல்லை என்றும், மத்திய-மாநில அரசுகளையும், காப்பீட்டு நிறுவனங்களையும் காரணம் காண்பித்து அளிக்கப்படும் விளக்கத்தால் எவ்வித தீர்வும் ஏற்படப் போவதில்லை. உரிய காலத்தில் இழப்பீட்டுத் தொகை கிடைக்காதது, பொருளாதார ரீதியாக பாதிப்புகளை சந்தித்து வரும் விவசாயிகளுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
இதற்கு பதிலளித்த ஆட்சியர், கொடைக்கானலுக்கு வந்திருந்த முதல்வரிடம் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை குறித்து தெரிவித்துள்ளோம். விவசாயிகளின் நலன் கருதி துரிதமாக பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார் என்றார்.
ஆனால், இந்த பதிலால் எவ்வித பயனுமில்லை என தெரிவித்த விவசாயிகள், குறிப்பிட்ட காலத்துக்குள் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கும் வரை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்தனர். பின்னர், ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்குக்கு வெளியே தரையில் அமர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிற்பகலில் குறைதீர் கூட்டம் முடிவுற்ற பின், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் நிர்வாகிகளை அழைத்து ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஒற்றை இலக்க இழப்பீட்டுத் தொகை பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காணப்படும் என்றும், 33ஆயிரம் விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையை பொருத்தவரை, தில்லியில் நடைபெறும் காப்பீட்டு நிறுவனங்களுக்கான கூட்டத்துக்கு பின் முடிவு எட்டப்படும் என்றும், ஜூன் மாத இறுதிக்குள் இழப்பீட்டுத் தொகை கிடைக்கும் எனவும் ஆட்சியர் உறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இணை இயக்குநர் பதிலால் சலசலப்பு
முற்றுகைப் போராட்டத்தின்போது ஆட்சியரிடம் பேசிக் கொண்டிருந்த விவசாயிகளிடம், இழப்பீட்டுத் தொகை பெறுவதற்கு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்குமாறு வேளாண்மை இணை இயக்குநர் ஜெ.சேகர் தெரிவித்தார். இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள் இணை இயக்குநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக விவசாயிகளை பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைத்ததில் வேளாண்மைத் துறை அலுவலர்களின் பங்களிப்பே பிரதானமாக இருந்தது. நீதிமன்றத்தை அணுகினால், அதற்கான வழக்கு செலவை யார் ஏற்றுக் கொள்வது என கேள்வி எழுப்பினர். இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டச் செயலர் இரா. சச்சிதானந்தம், மாவட்டத் தலைவர் டி. செல்வராஜ், தொப்பம்பட்டி ஒன்றியச் செயலர் என். நாகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.