ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் செவ்வாய்க்கிழமை தொடங்கிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 10,750 பேர் பங்கேற்றனர்.
ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக, மாவட்டத்தில் உள்ள 1,052 பள்ளிகள் செவ்வாய்க்கிழமை செயல்படவில்லை. தமிழகத்தில் கடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சிறப்புக் காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்டோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் 7,250 ஆசிரியர்கள் மற்றும் 3,500 அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் வட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சாலமன் ஜோசப், சேகர், சந்திரசேகர் ஆகியோர் தலைமை வகித்தனர். இதேபோல் நத்தம், வேடசந்தூர், நிலக்கோட்டை, கொடைக்கானல், ஆத்தூர், பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களிலும் ஜாக்டோ - ஜியோ அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1052 பள்ளிகள் செயல்படவில்லை: திண்டுக்கல் மாவட்டத்தில், மொத்தம் உள்ள 1,960 பள்ளிகளில் 1,052 பள்ளிகள் ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக செவ்வாய்க்கிழமை செயல்படவில்லை. தொடக்க கல்வித்துறையில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 5,015 ஆசிரியர்களில் 3,995 பேரும், அரசு உதவிப் பெறும் தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் 2,067 ஆசிரியர்களில் 306 பேரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அதேபோல், அரசு உயர்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 4,450 ஆசிரியர்களில் 2,838 பேரும், அரசு உதவிப் பெறும் உயர்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 2,183 ஆசிரியர்களில் 66 பேரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அரசு உதவிபெறும் பள்ளிகளை மூட கோரிக்கை: வேலை நிறுத்தப் போராட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த பெரும்பாலான ஆசிரியர்கள் பங்கேற்கவில்லை. அதையடுத்து, ஜாக்டோ - ஜியோ போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில், மாவட்டத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்குச் சென்று வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டினர். அதேபோல், வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்காத அரசு ஊழியர்களை சந்தித்தும் ஆதரவு திரட்டினர்.
பழனியில்: பழனி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க பழனி வட்டக்கிளை தலைவர் வேலுச்சாமி, தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்க நிர்வாகி செந்தில்குமார் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் மங்களபாண்டியன் முன்னிலை வகித்தார். இதில், கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கமிட்டனர்.
கொடைக்கானலில்: கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் ஜாக்டோ - ஜியோ சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கணேசன் தலைமை வகித்தார். சூசைஜான் முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் வளர்மதி, மாநில உயர்மட்டக்குழுவைச் சேர்ந்த குன்வர் ஜோஸ்வா ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருச்செங்கோட்டில் தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி: முதல்வர் இரங்கல், நிதியுதவி அறிவிப்பு

ஐபிஎல் இறுதிப் போட்டி: திருவிழாவாக மாறிய குஜராத்!

அபிஷன் ஜீவிந்த்தின் புதிய பட புரோமோ!

இம்பாக்ட் வீரர் விதி நீக்கப்பட வேண்டும்: சச்சின் டெண்டுல்கர்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


