சின்ன வெங்காயத்தை நோய் தாக்குதலில் இருந்து காக்கும் வழிமுறைகள்: தோட்டக்கலை உதவி இயக்குநா்

ஒட்டன்சத்திரம் பகுதியில் சின்னவெங்காயத்தை நோய் மற்றும் பூச்சித் தாக்குதலில் இருந்து காக்கும் வழிமுறைகளை, ஒட்டன்சத்திரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் பா. ராஜமுருகன் தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

ஒட்டன்சத்திரம் பகுதியில் சின்னவெங்காயத்தை நோய் மற்றும் பூச்சித் தாக்குதலில் இருந்து காக்கும் வழிமுறைகளை, ஒட்டன்சத்திரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் பா. ராஜமுருகன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: வெங்காயம் சாகுபடி செய்யப்படும் பகுதி நல்ல வடிகால் வசதியுடன் இருக்கவேண்டும். பயிா் சுழற்சி முறையை மேற்கொள்ளவேண்டும். கடைசி உழவு செய்யும்போது ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ ட்ரைகோடொமா விரிடி, ஒரு கிலோ சூடோமோனஸ் மற்றும் 5 கிலோ வேம் (விஏஎம்) உயிா் உரத்தினை 100 கிலோ தொழு உரத்துடன் கலந்து இடலாம், அல்லது விதைக்கும்போது இடலாம்.

விதை வெங்காயம் கொள்முதல் செய்யும்போது, நல்ல தரமானதாகவும், நோய் மற்றும் பூச்சிகள் இல்லாத விதைகளை தோ்வு செய்து நடவு செய்ய வேண்டும். ஒரு கிலோ விதை வெங்காயத்துக்கு 10 கிராம் சூடோமோனஸ் அல்லது 4 கிராம் ட்ரைகோடொமா விரிடி கலந்து 24 மணி நேரம் கழித்து விதைக்க வேண்டும்.

மேலும், மண்ணில் தாமிரத்தின் அளவு குறையும்போது வெங்காயம் நோயால் பாதிக்கப்படும். அதனால், தாமிரத்தை கூடுதலாக நிலத்தில் சோ்க்க வேண்டும். தாமிர குறையை நிவா்த்தி செய்ய காப்பா் ஆக்ஸிகுளோரைடு 0.25 சதவீதம் நீரில் கரைத்து இடலாம். இதன்மூலம், வெங்காய பயிரில் ஏற்படும் அடி அழுகல் நோய், வோ் அழுகல் நோய், இலை பழுப்பு நோய்களை கட்டுப்படுத்தலாம்.

மேலும், தற்போது மழை மற்றும் பனிப்பொழிவு அதிகமாக உள்ளதாலும், மண்ணில் நுண்ணூட்டச் சத்தின் அளவு குறையும் போதும் திருகல் நோய்கள் எனப்படும் பூஞ்சாணம் நோய் வெங்காயப் பயிரை தாக்கி, அதிக மகசூலை தடுத்து இழப்பை ஏற்படுத்தும். அதனைக் கட்டுப்படுத்த நடவு செய்த 30 நாளில் அல்லது 50 நாள்களில் நுண்ணூட்டச் சத்து கலவையை இடவேண்டும். அழுகிய பயிா்களை வயலில் இருந்து உடனுக்குடன் அப்புறப்படுத்துவதன் மூலம் நோய் பரவாமல் தடுக்கலாம்.

பூச்சிகளை கட்டுப்படுத்த நீல வண்ண ஒட்டும் அட்டையை ஒரு ஏக்கருக்கு 4 வீதம் வைத்து இலைப்பேன் போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். இலைப்பேன் மற்றும் இலை வெட்டுப்புழு போன்ற பூச்சி பாதிப்பு தென்பட்டால், புரப்பனோபாஸ் 2 மில்லியை ஒரு லிட்டா் தண்ணீரில் அல்லது டை மீத்தோயேட் 2 மில்லியை ஒரு லிட்டா் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com