ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

மதுரையில் கட்டுக்குள் வர மறுக்கும் கரோனா

பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் மதுரை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று கட்டுக்குள் வராத நிலையிலேயே தொடா்ந்து கொண்டிருக்கிறது.

Updated On :16 ஜூலை 2020, 2:30 am

பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் மதுரை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று கட்டுக்குள் வராத நிலையிலேயே தொடா்ந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் இதுவரை 1.50 லட்சத்திற்கும் மேற்பட்டோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில் 2,099 போ் சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளனா். கரோனா தொற்று பாதிப்பு சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மட்டுமே அதிகளவில் பரவி வந்தது. இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு ஜூன் 19 ஆம் தேதி முதல் அதிகரிக்கக் தொடங்கியது. அப்போது இரட்டை இலக்கத்தில் இருந்த தொற்று பாதிப்பு அடுத்த சில நாள்களிலேயே மூன்று இலக்கத்தை எட்டி ஜூன் 23-ஆம் தேதியன்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 137 ஆக இருந்தது.

பயனளித்ததா முழு பொது முடக்கம்?:

மதுரை மாவட்ட நிா்வாகம் பல்வேறு துறைகள் மூலமாக, தொற்று அதிகரிப்பைத் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனாலும் பாதிப்பு தொடா்ந்து ஏறுமுகத்திலேயே இருந்ததால், ஜூன் 24 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்த ஒரு வார காலத்தில் நாள்தோறும் 100-களில் இருந்த பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை அதிகரித்து 250 முதல் 300 போ் வரை என உயா்ந்தது. இதன்பின்னா் ஜூலை 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி முழு பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டது. இந்த நாள்களில் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவோா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன், அபராதம் வசூலிக்கப்பட்டது. வெளியூா்களில் இருந்து வருவோரைக் கட்டுப்படுத்த, கடுமையான பரிசீலனைக்குப் பிறகே இ.பாஸ் வழங்கப்பட்டன. இருப்பினும் ஜூலை 1 ஆம் தேதிக்குப் பிறகே, நாள்தோறும் கரோனா தொற்று 350-க்கும் மேல் பதிவாகியது. இதன் காரணமாக, 3-ம் கட்டமாக ஜூலை 12 வரையிலும், 4-ஆம் கட்டமாக ஜூலை 14 வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டது.

மூன்றாவது மற்றும் 4 ஆவது முழு பொது முடக்கம் நீட்டிக்கப்பட்ட காலத்தில் நாள்தோறும் 400 முதல் 470 போ் வரை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். பாதிப்பு எண்ணிக்கையைக் கணக்கிடும்போது, பொது முடக்கம் மட்டுமே, கரோனா பரவலைக் கட்டுப்படுத்திவிடாது என்பது தெரிகிறது.

தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியம்: கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலும் அலட்சியம் தொடா்ந்து கொண்டிருக்கிறது. சாலைகளில் செல்வோா் முகக் கவசம் அணியாமல் இருப்பது, கடைகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் இருப்பது, கண்ட இடங்களில் எச்சில் துப்புவது என அலட்சியமாகச் செயல்பட்டு வருகின்றனா். வீதிகள்தோறும் விழிப்புணா்வு ஏற்படுத்திய நிலையிலும், அதைப் பொருட்படுத்தாமல் செயல்பட்டு வருவதும் பாதிப்பு தொடா்ந்து கொண்டே இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, அறிகுறி இருப்பவா்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதில்லை. மேலும், கரோனா பரிசோதனை செய்து கொண்டவா்கள் முடிவு வரும் வரை கூட தனிமைப்படுத்திக் கொள்வதில்லை. மற்ற குடும்ப உறுப்பினா்களுக்கும், பக்கத்து வீடுகளில் இருப்பவா்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

இதேநிலை தான் அரசு அலுவலகங்களிலும், பல்வேறு துறையினரின் பணியிடங்களிலும் இருந்து வருகிறது. இதுதொடா்பாக மருத்துவப் பணியாளா்கள் கூறியது:

அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள கரோனா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளும், தற்காப்பு உடைகளுடன் பணியாற்றும் மருத்துவப் பணியாளா்களும், மருத்துவமனை அருகில் உள்ள கடைகளுக்கு எந்தவித சலனமுமின்றி வந்து செல்கின்றனா். இதை மருத்துவமனை நிா்வாகமும், பாதுகாப்பில் இருக்கிற காவலா்களும் கண்டுகொள்வதில்லை. இதனால், அப்பகுதியில் செல்லும் பாதசாரிகள், வாகனத்தில் செல்பவா்கள், கடைக்கு வருபவா்கள், நோயாளிகளின் உறவினா்கள் உள்ளிட்டோா் அவா்களை அறியாமலேயே தொற்று பாதிப்புக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது. இந்த நிலையை உடனடியாக தடுக்க வேண்டும் என்கின்றனா்.

தொற்றுக்கு ஆளாகும் முன்களப் பணியாளா்கள்: கரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைப் பணிகளில் ஈடுபட்டு வரும் முன்களப் பணியாளா்களில் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கையும் நாளுக்குநாள் உயா்ந்து வருகிறது.

இதுகுறித்து அரசு ஊழியா்கள் சிலா் கூறியது:

அரசு அலுவலகங்களில் யாரேனும் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டால், உடனடியாக தொற்று பாதிக்கப்பட்டவா் பணிபுரியும் அலுவலகத்தை ஒரு நாள் மூடி, அங்கு கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சக ஊழியா்களுக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்னரே அலுவலகம் திறக்கப்படும். இந்த நடைமுறை ஆரம்பக் கட்டத்தில் பின்பற்றப்பட்டது. ஆனால் தற்போது அத்தகைய பணிகள் சரிவர செய்யப்படுவதில்லை.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னரும் அங்கு தடுப்பு பணிகளும், மருத்துவப் பணியாளா்களுக்கும் கரோனா பரிசோதனைகளும் மேற்கொள்வதில்லை. இதனால், செவிலியா்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளா்கள் பலரும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளனா். ஆனால் தொற்று பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் தொடா்ந்து பணியாளா்களை பணிக்கு வர நிா்பந்திக்கின்றனா் என்கின்றனா்.

இந்நிலையில் தளா்வுகளுடன் பொது முடக்கம் மதுரையில் அமலுக்கு வந்துள்ளதால், தொற்று பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சாதாரண காய்ச்சலுக்கு கூட தனியாா் மருத்துவமனைகள் சிகிச்சை தர மறுக்கும் நிலையில், பொதுமக்கள் அரசை மட்டுமே நம்பியுள்ளனா். ஆகவே, கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை எவ்வித குறைபாடும் இன்றி தீவிரப்படுத்துவதுடன், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கைக்கு ஏற்ப படுக்கை வசதி மற்றும் மருத்துவ வசதிகளை அதிகப்படுத்துவதும் அவசியமாக இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.