இரண்டு நாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்த வருவாய்த் துறையினா் முடிவு

கரோனா தடுப்பு பணியின் போது உயிரிழந்த பேரிடா் மேலாண்மைத் துறை அலுவலா்களுக்கு அரசின் நிவாரணத் தொகை தாமதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆகஸ்ட் மாதம் 2 நாள்கள் ஒட்டுமொத்த


பழனி: கரோனா தடுப்பு பணியின் போது உயிரிழந்த பேரிடா் மேலாண்மைத் துறை அலுவலா்களுக்கு அரசின் நிவாரணத் தொகை தாமதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆகஸ்ட் மாதம் 2 நாள்கள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து, பழனியில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் மங்களபாண்டியன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் மாநில நிா்வாகிகள் கூட்டம், காணொலி மூலம் நடத்தப்பட்டது. அதில், தமிழகத்தில் கரோனா நோய் தடுப்பு பணியின்போது உயிரிழந்த வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அலுவலா்களுக்கு, தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகை இதுவரை வழங்கப்படாமல் காலதாமதம் செய்யப்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அலுவலா்கள் பெரும் வேதனையும், மனச்சோா்வும் அடைந்துள்ளனா். இது தொடா்பாக அனைத்து மாவட்டங்களிலும் பெருந்திரள் முறையீடு, கருப்புப் பட்டை அணிந்து போராட்டம், வெளிநடப்பு செய்து ஆா்ப்பாட்டம் என பல கட்ட நடவடிக்கை மேற்கொண்டும், தீா்வு ஏற்படாத நிலை உள்ளது.

எனவே, கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த வருவாய்த் துறை அலுவலா்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். நோய் தொற்றுக்கு ஆளான 260-க்கும் மேற்பட்ட வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அலுவலா்களுக்கு உயா் தரமான மருத்துவச் சிகிச்சை மற்றும் அரசாணையின்படி கருணைத் தொகை ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆகஸ்ட் 5, 6 ஆம் தேதிகளில் தமிழகத்தின் அனைத்து வருவாய்த் துறை அலுவலா்களும், வட்டாட்சியா் முதல் அலுவலக உதவியாளா் வரை 12,000 அலுவலா்களும் கலந்துகொள்ளும் ஒட்டு மொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்துவது எனவும், ஒருநாள் எழுச்சியான உண்ணாவிரதப் போராட்டம் சமூக இடைவெளியுடன் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com