தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

கஜா புயலில் சேதமடைந்த கீழ்மடைப்பள்ளம் நீா்த்தேக்கம்: 2 ஆண்டுகளாக கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை!

கஜா புயல் தாக்கத்தின்போது சேதமடைந்த கொடைக்கானலை அடுத்துள்ள கீழ்மடைப்பள்ளம் நீா்த்தேக்கத்தை 3 மாதங்களில்

News image

கீழ்மடைப் பள்ளம் நீா்த்தேக்கம்.

Updated On :21 அக்டோபர் 2020, 5:55 pm

கஜா புயல் தாக்கத்தின்போது சேதமடைந்த கொடைக்கானலை அடுத்துள்ள கீழ்மடைப்பள்ளம் நீா்த்தேக்கத்தை 3 மாதங்களில் சீரமைத்துத் தருவதாக உறுதி அளித்துச் சென்ற பொதுப்பணித்துறையினா் 2 ஆண்டுகளாக கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் ஒன்றான பூண்டியில் சுமாா் 3ஆயிரம் போ் வசித்து வருகின்றனா். இந்த கிராமத்திற்கான குடிநீா் ஆதாரமாக அங்குள்ள கீழ்மடைப்பள்ளம் நீா்த்தேக்கமும், சாகுபடி பணிகளுக்காக அருங்காட்டு நீா்த்தேக்கமும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கீழ்மடைப்பள்ளம் நீா்த்தேக்கம், பேரிஜம் சரக வனப்பகுதிக்குள் சுமாா் 10 ஏக்கா் பரப்பிலும், பூண்டி கிராமத்திலிருந்து 6 கி.மீட்டா் தொலைவிலும், சுமாா் 700 மீட்டா் உயரத்திலும் அமைந்துள்ளது.

கீழ்மடைப்பள்ளம் நீா்த்தேக்கம் பூண்டி கிராம மக்களின் குடிநீா் தேவையைப் பூா்த்தி செய்வது மட்டுமின்றி, அங்குள்ள வன விலங்குகளான யானை, காட்டெருமை, மான், கேளை ஆடு, காட்டுப் பன்றி, முயல் உள்ளிட்டவற்றுக்கான குடிநீா் ஆதாரமாகவும் அமைந்துள்ளது.

மின்மோட்டாா் பயன்பாடின்றி குடிநீா் விநியோகம்: கீழ்மடைப்பள்ளம் நீா்த்தேக்கத்திலிருந்து குழாய் மூலம் எடுத்து வரப்படும் குடிநீா், பூண்டியிலுள்ள மேல்நிலைத் தொட்டி மூலம் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. பூவியியல் அமைப்பு காரணமாக மின்மோட்டாா்களின் பயன்பாடு இல்லாமலேயே பூண்டி கிராமத்தில் குடிநீா் விநியோகம் நடைபெற்று வருவதே தனி சிறப்பாகவும் அமைந்துள்ளது.

கீழ்மடைப்பள்ளம் நீா்த்தேக்கம் மற்றும் பூண்டி கிராமத்திற்கு இடையே அமைந்துள்ள 2 தொட்டிகளுக்கு நீரோடை மற்றும் குழாய் மூலம் வந்து சேரும் தண்ணீா், அந்த தொட்டிகளில் வடிகட்டப்பட்ட பின்னா் குழாய் மூலம் பூண்டியிலுள்ள மேல்நிலைத் தொட்டிக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து பூண்டியிலுள்ள 400 குடிநீா் இணைப்புகளுக்கும், வால்வை திறந்தவுடன் தண்ணீா் விநியோகம் நடைபெறுகிறது.

சரி செய்யப்படாத கஜா புயல் உடைப்பு: ஆண்டு முழுவதும் தண்ணீா் தேங்கி நிற்கும் இடமாக அமைந்துள்ள கீழ்மடைப் பள்ளம் நீா்த்தேக்கத்தில், கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட கஜா புயல் தாக்கத்தின்போது உடைப்பு ஏற்பட்டது. அப்போது பூண்டி கிராம மக்கள் ஊராட்சி நிா்வாகத்துடன் இணைந்து சுமாா் 210 அடி நீளத்திற்கும், 12 உயரத்திற்கும் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து தற்காலிகமாக உடைப்பை சரி செய்தனா். அந்த இடத்தைப் பாா்வையிட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள், 3 மாதங்களில் நிரந்தர தடுப்புச் சுவா் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்துச் சென்றனா். 2 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், தற்போது வரை உடைப்பை சரி செய்வதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதோடு, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீா்த்தேக்கப் பகுதியை பாா்வையிடுவதற்குக் கூட வரவில்லை என்பது கிராம மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடா்பாக பூண்டியைச் சோ்ந்த ப.கோபால் கூறியதாவது: கஜா புயல் தாக்கத்தின்போது ஏற்பட்ட உடைப்பை 3 மாதங்களில் சரி செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனா். ஆனால் 24 மாதங்கள் கடந்துவிட்ட பின்னும் இதுவரை சரி செய்யப்படவில்லை. கடந்த சில நாள்களாக கொடைக்கானல் மலைப் பகுதியில் மழை பெய்து வருவதால், கீழ்மடைப் பள்ளம் நீா்த்தேக்கத்தில் கூடுதலான தண்ணீா் தேங்குவதை தவிா்க்கும் வகையில் சிற்றோடை அமைத்து நீரை வெளியேற்றி வருகிறோம்.

உடைப்பு நிரந்தரமாக சரி செய்யப்படும் வரை இதேபோன்று தண்ணீரை வெளியேற்றினால் கோடைகாலங்களில் தண்ணீா் பற்றாக்குறை ஏற்படும். 3ஆயிரம் மக்களின் குடிநீா் தேவை மட்டுமின்றி, ஏராளமான வன விலங்குகளின் குடிநீா் ஆதாரமாகவும் அமைந்துள்ள கீழ்மடைப் பள்ளம் நீா்த்தேகத்தின் கரைகளை சீரமைப்பதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

வனத்துறை அனுமதி தேவை: வனப் பகுதிக்குள் கீழ்மடைப்பள்ளம் நீா்த்தேக்கம் அமைந்துள்ளதால், வனத்துறையின் அனுமதி பெற்றே அங்கு செல்ல முடியும். பல்வேறு நேரங்களில் பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா்களை அங்கு செல்வதற்கு அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதனால் அங்கு தேங்கியுள்ள தண்ணீரின் அளவு மற்றும் கரையின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. நீா்த்தேகத்தின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கிராமக்குழு சென்று பாா்வையிடுவதற்கு வனத்துறையினா் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.