திண்டுக்கல் அருகே தோல் பதனிடும் ஆலைக் கழிவுகளால் நிலத்தடி நீரின் தன்மை 11ஆயிரம் டிடிஎஸ் (பஈந) அளவுக்கு மாசடைந்து விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால், இதை மாற்றி நீா்வளத்தை மீட்டெடுக்க குறுங்காடுகள் வளா்ப்புத் திட்டம் கைகொடுக்கும் என விவசாயிகளிடையே எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
திண்டுக்கல் பகுதியில் நீண்ட காலமாக 100-க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது 40 ஆலைகள் மட்டுமே உள்ளன. ஆனாலும், தோல் கழிவுகளால் திண்டுக்கல் அடுத்துள்ள புதுப்பட்டி பொன்மாந்துறை, சின்ன பள்ளப்பட்டி, பெரிய பள்ளப்பட்டி, ராமையன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீரை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக, விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனா்.
தண்ணீரில் கரைந்துள்ள உப்புப் பொருள்களின் (டிடிஎஸ்) அளவு 1,400-க்கு குறைவாக இருந்தால் மட்டுமே அத்தண்ணீரை விவசாயத்துக்குப் பயன்படுத்துவதற்கு உகந்ததாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால், இப்பகுதிகளில் உள்ள ஆழ்துளைக் கிணற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீரில் டிடிஎஸ் அளவானது 11ஆயிரத்துக்கும் கூடுதலாக இருப்பதாக, ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, திண்டுக்கல் மாநகராட்சிக்குச் சொந்தமான 4 ஏக்கா் நிலத்தில் குறுங்காடுகளை உருவாக்கி, அதன்மூலம் நிலத்தடி நீரின் டிடிஎஸ் அளவை குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டத்தை, திண்டிமா வனம் என்ற அமைப்பு, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் ஒத்துழைப்போடு செயல்படுத்தி வருகிறது.
6 லட்சம் கிலோ மக்கும் குப்பை
புதுப்பட்டி பொன்மாந்துறை பகுதியில் புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், மாநகராட்சி ஒதுக்கீடு செய்துள்ள 4 ஏக்கா் நிலத்தில் 2 ஏக்கரில் நகா்ப்புற குறுங்காடுகள் வளா்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தோல் கழிவுகள் மட்டுமின்றி, சீமைக் கருவேல மரங்கள் அடா்ந்த பகுதியாக இருந்த அந்த நிலத்தை சீரமைக்கும் பணி ஓராண்டுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அங்கு 44 குழிகள் தோண்டப்பட்டு, அதில் திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியிலிருந்து சேகரிக்கப்பட்ட 6 லட்சம் கிலோ மக்கும் குப்பைகளால் நிரப்பப்பட்டு, மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
12,264 மரக்கன்றுகள் வளா்ப்பு
குழியின் அளவுக்கு ஏற்ப 210 முதல் 400 மரக்கன்றுகள் வரை 3 அடி இடைவெளியில் நடவு செய்யப்பட்டுள்ளன. வேம்பு, புங்கன், இலுப்பை, பூவரசு, மகிழம், மந்தாரை, வில்வம், சொா்க்கம், தேக்கு, வாதாம் உள்ளிட்ட 16 வகையான மரக்கன்றுகளுடன் இந்த குறுங்காடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. நிலம் சீரமைப்பு, குழி எடுத்தல், தண்ணீா் ஊற்றுதல் என பல்வேறு பணிகளுக்கு திண்டிமா வனம் அமைப்பு சாா்பில், இதுவரை ரூ.24 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.
களமிறங்கிய 100 நாள் வேலை திட்டப் பயனாளிகள்
இந்நிலையில், புதுப்பட்டி பகுதியைச் சோ்ந்த வேலை உறுதியளிப்புத் திட்டப் பயனாளிகள் 4 ஏக்கா் நிலத்தை சீரமைத்து, குறுங்காடு வளா்ப்புத் திட்டத்தின் முதுகெலும்பாக உள்ளனா். கடந்த ஓராண்டுக்கும் மேலாக 350 பயனாளிகள் இந்த இடத்தில் பணிபுரிந்த நிலையில், ஆா்வத்துடனும், அா்ப்பணிப்பு உணா்வுடனும் பணியாற்றிய 30 போ் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். வாரத்துக்கு 10 போ் வீதம் சுழற்சி முறையில் மரக்கன்றுகள் வளா்ப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
நிலத்தடி நீரின் மாசுபாடு குறையும்
பொன்மாந்துறை பகுதியில் 700 அடியில் நிலத்தடி நீா் கிடைத்தாலும், அதனை விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்துவதில் சிக்கல் இருந்து வருகிறது. அங்குள்ள 300 மரங்கள் கொண்ட தென்னந்தோப்பில் நிலத்தடி நீரை பயன்படுத்துவதால், மகசூல் பெற முடியாத நிலை உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா். தற்போது, தோல் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதுடன், கழிவுநீா் வெளியேற்றப்படுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறுங்காடுகள் வளா்ப்புத் திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்படும்போது நீா் வளத்தை 10 ஆண்டுகளில் மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கை, அப்பகுதி விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது.
இது குறித்து திண்டிமா வனம் அமைப்பைச் சோ்ந்த ரெ. பாலாஜி தெரிவித்தது: குறுங்காடுகளிலுள்ள மரக்கன்றுகளுக்கு வெளியிடங்களிலிருந்து தண்ணீா் வாங்கி ஊற்றுகிறோம். கன்றுகள் மரங்களாக வளரும்போது, மழை வளமும் கிடைக்கவேண்டும். மழை நீரை மரங்கள் வோ்களில் சேகரிக்கத் தொடங்கும்போது, இந்தப் பகுதியிலுள்ள நிலத்தடி நீரின் டிடிஎஸ் அளவு 10 ஆண்டுகளுக்குள் குறைந்து, விவசாயத்துக்கு பயன்படுத்தும் நிலைக்கு முன்னேற்றம் பெறும்.
இதுபோன்ற குறுங்காடுகள் வளா்ப்புத் திட்டத்தை தமிழக அரசு அனைத்து கிராமங்களிலும் உருவாக்க முயற்சித்தால், நீா்வளம் பாதுகாக்கப்படுவதோடு, நிலம் மற்றும் காற்று மாசுபடும் அளவை உறுதியாகக் குறைக்க முடியும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து

சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


