திருக்கோயில்கள் தொடர்புடைய 4 கோடி பக்கங்கள் கொண்ட பதிவேடுகள் பதிவிறக்கம் செய்யப்படுகின்றன: அமைச்சர் பி.கே.சேகர்பாபு

திருக்கோயில்கள் தொடர்புடைய 4 கோடி பக்கங்கள்கொண்ட பதிவேடுகள் பதிவிறக்கம் செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். 
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் 48 கிலோ வெள்ளியில் உருவாக்கப்பட்ட ரிஷப வாகனத்தை பார்வையிட்ட அமைச்சர் சேகர்பாபு.
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் 48 கிலோ வெள்ளியில் உருவாக்கப்பட்ட ரிஷப வாகனத்தை பார்வையிட்ட அமைச்சர் சேகர்பாபு.

திருக்கோயில்கள் தொடர்புடைய 4 கோடி பக்கங்கள்
கொண்ட பதிவேடுகள் பதிவிறக்கம் செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் திருக்கோயில், மங்களப்புள்ளி லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், கொத்தப்புள்ளி கதிர் நரசிங்க பெருமாள் திருக்கோயில்களில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஆகம விதிகளின்படி திருப்பணிகள் நிறைவுற்று 12 ஆண்டுகள் நிறைவடைந்த திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 25 ஆண்டுகள், 50 ஆண்டுகள், 100 ஆண்டுகளை கடந்தும் கூட பல கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளன. 

அதேபோல்  திருப்பணிகள் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் முடிந்தும்கூட பல கோயில்களில் நிறைவடையாமல் உள்ளன. அதுபோன்ற கோயில்களை ஆய்வு செய்து, திருப்பணிகளை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கு தேவையான நிதி, இந்து சமய அறநிலையத் துறை  ஆணையரின் பொது நிதியிலிருந்து வழங்கவும் அறிவுறுத்தப்பட்டள்ளது. 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில்களை சீரமைக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலை பொருத்தவரை, 2ஆவது ரோப் கார் சேவை அடுத்த 2 ஆண்டுகளுக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

கோயில் நிலங்கள் மீட்பு பணிகளை பொருத்தவரை சட்டத்திற்குள்பட்டு துரிதமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த பணிகளுக்காக மாவட்டந்தோறும் வழக்குரைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ரூ.2500 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்பு: திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த 10 மாதங்களில் இதுவரை ரூ.2500 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான நிலங்கள் வெள்ளிக்கிழமை(ஏப்.9)மீட்கப்பட்டுள்ளன.

4 கோடி பக்கங்கள் பதிவிறக்கம்: பல நூற்றாண்டுகள் பழமையான திருக்கோயில்கள் தொடர்பான சுமார் 4  கோடி  பக்கங்கள்  கொண்ட பதிவேடுகள் தற்போது பதிவிறக்கம் செய்யப்பட்டு வருகின்றன. 38 மாவட்டங்களுக்கும் வருவாய்துறையிடமிருந்து ஓராண்டு பணிக்காக வட்டாட்சியர்களை பெற்றுள்ளோம். அந்த வட்டாட்சியர்கள் மூலம் ஆக்கிரமிப்புகள், நில பயன்பாடு மாற்றம் குறித்து கண்டறிந்து, அறநிலைத் துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பிறத் துறைகளுக்கு ஒத்துப் போகும் நிலங்கள், ஒத்துப் போகாத நிலங்கள் வகைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 

ஒத்துப் போகாத நிலங்களை மேல்முறையீடு செய்து மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை கணினி முறையில் அளவீடு செய்து, குறியீடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 45ஆயிரம் ஏக்கர் நிலம் அளவீடு செய்யப்பட்டு கல் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 48 முதல் நிலை திருக்கோயில்களில் (ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம்) தமிழலில் அர்ச்சனை நடைபெறுகிறது. இத்திட்டம் பிற கோயில்களிலும் தொடர்ந்து விரிவுப்படுத்தப்படும்.

872 சிலைகள் மீட்பு: வெளிநாடுகளிலிருந்து 872 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றை பாதுகாப்பது குறித்தும், எந்த கோியலுக்கு சொந்தமானது என கண்டறிந்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களை பராமரிப்பது குறித்து, அந்த துறைக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அந்த கோயில்களை பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபன், மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் ஆகியோர் உடனிருந்தனர். 

அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் 48 கிலோ வெள்ளியில் உருவாக்கப்பட்ட ரிஷப வாகனத்தை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com