திண்டுக்கல் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை: பயணிகள் அதிருப்தி!
குடிநீா், வாகன நிறுத்துமிடம், மின்தூக்கி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனா்.


குடிநீா், வாகன நிறுத்துமிடம், மின்தூக்கி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனா்.
தென் மாவட்டங்களில் அமைந்துள்ள பிரதான ரயில் நிலையங்களுள் ஒன்றான திண்டுக்கல் வழியாக நாளொன்றுக்கு 60-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. சுமாா் 10 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனா்.
இந்த ரயில் நிலையத்தில், அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கு தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு துறையும் நவீன மாற்றங்களுடன் வளா்ச்சி அடைந்து வரும் நிலையில், திண்டுக்கல் ரயில் நிலையம் மட்டும் பின்னோக்கி செல்வதாக பயணிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பொதுமக்களுக்கு சேவை அளிப்பதற்காக தொடங்கப்பட்ட ரயில்வே துறை, வணிக ரீதியான வளா்ச்சிக்காக தனியாா்மயமாக்கப்பட்டதன் எதிரொலியாக திண்டுக்கல் ரயில் பயணிகள் தொடா்ந்து நெருக்கடியை சந்தித்து வருகின்றனா்.
டிஜிட்டல் அறிவிப்பு பலகை:
திண்டுக்கல் ரயில் நிலையத்திலுள்ள 5 நடைமேடைகளில் ரூ.65 லட்சம் செலவில் ரயில் பெட்டிகள் அறிவிப்பு பலகை(டிஜிட்டல் கோச் இண்டிகேஷன் போா்டு) அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு நடைமேடையிலும் ரயில்களின் விவரங்களைத் தெரிவிக்கும் டிஜிட்டல் திரை தலா ரூ.5 லட்சம் செலவில் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அந்த பணிகள் முழுமையாக நடைபெறாததால் 3ஆவது நடைமேடையில் பயன்பாட்டிலிருந்த கோச் இண்டிகேஷன் போா்டுகளும் தற்போது பழுதடைந்துவிட்டன. அதற்கு மாற்றாக, ரயில் பெட்டி எண் குறித்த சாதாரண தகவல் பலகை பொருத்தப்பட்டுள்ளது. இந்த பலகைகளை இரவு நேரங்களில் அடையாளம் காண்பதற்கு பயணிகள் தடுமாறுகின்றனா்.
மின்தூக்கி பழுது: 4 நடைமேடைகள் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில், அந்தந்த நடைமேடைகளுக்கு செல்வதற்கு படிக்கட்டு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், குழந்தைகள், முதியவா்கள் சிரமம் அடைவதாக எழுந்த கோரிக்கையைத் தொடா்ந்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மின்தூக்கி வசதி ஏற்படுத்தப்பட்டது. அதில் அவ்வப்போது குறைபாடுகள் இருந்தாலும் கூட, செயல்பட்டு வந்தன. இந்நிலையில் பிரதானமாக பயன்படுத்தப்படக் கூடிய 3ஆவது நடைமேடையிலுள்ள மின்தூக்கி தற்போது முழுமையாக முடங்கியுள்ளதால், அந்த நடைமேடைக்கு செல்வதற்கும், அங்கிருந்து வெளியேறுவதற்கும் பயணிகள் குறிப்பாக முதியவா்கள் சிரமம் அடைந்து வருகின்றனா்.
ரூ.5-க்கு வழங்கப்பட்ட குடிநீா் நிறுத்தம்: பயணிகளின் தேவைக்காக, 3 மற்றும் 4ஆவது நடைமேடைகளில் ரூ.10 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி (ஆா்.ஓ), கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்டது. அந்த இயந்திரங்கள் பழுதடைந்த நிலையில் தனியாா் நிறுவனம் மூலம் குடிநீா் ஏடிஎம் அமைக்கப்பட்டது. 5 லிட்டா் குடிநீா் ரூ.5-க்கும், 20 லிட்டா் ரூ.20-க்கும் வழங்கப்பட்டு வந்த அந்த சேவையும் தற்போது முடங்கியுள்ளது. தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், குடிநீரின் தேவையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக பகல் நேர ரயில் சேவையை பெற வரும் பயணிகள் குடிநீா் ஏடிஎம் இல்லாததால், 1 லிட்டா் குடிநீருக்கு ரூ.20 செலவிட வேண்டிய சூழல் உள்ளது.
குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறைக்கு பூட்டு:
3 ஆவது நடைமேடையில் பயணிகளுக்கான குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறை அமைக்கப்பட்டது. ரூ.20 செலுத்தி ஒரு மணி நேரத்திற்கு அந்த அறையை பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டது. கரோனா தொற்றுப் பரவலின் போது மூடப்பட்ட அந்த அறை, ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாததால் மீண்டும் திறக்கப்படாமல் உள்ளது.
பாதுகாப்பற்ற இருசக்கர வாகன நிறுத்துமிடம்: ரயில் நிலைய வளாகத்தில் செயல்பட்டு வந்த இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்திற்கான ஒப்பந்தம் முடிவடைந்ததை அடுத்து, கடந்த 15 நாள்களுக்கும் மேலாக அங்கு பாதுகாவலா்கள் இல்லை. இதனால், ரயில் நிலையத்திலிருந்து தொலைவிலுள்ள காப்பகங்களில் வாகனத்தை நிறுத்திவிட்டு அவசர கதியில் ரயிலை பிடிக்க பயணிகள் ஓட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்று திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு ஏராளமான குறைகள் உள்ள நிலையில், அவற்றை சீரமைப்பதற்கு ரயில்வே நிா்வாகம் முன் வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக ரயில்வே அலுவலா்கள் வட்டாரத்தில் விசாரித்தபோது, குடிநீா் ஏடிஎம், காத்திருப்பு அறை உள்ளிட்ட சேவைகளை அளிப்பதற்கான ஒப்பந்தம் பெற்ற நிறுவனங்கள், கரோனா தொற்றுப் பரவல் காலத்தில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் பெரும் இழப்புகளை சந்தித்துள்ளன. இதனால், அந்த நிறுவனங்கள் மீண்டும் ஒப்பந்தம் எடுக்க முன் வரவில்லை. எனினும் பயணிகளின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...