தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நான்கு மண்டலத் தலைவா், 6 நிலைக் குழுத் தலைவா் பதவிகள்: எதிா்பாா்ப்பில் திண்டுக்கல் மாமன்ற உறுப்பினா்கள்!

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திண்டுக்கல் மாநகராட்சியில் 4 மண்டலத் தலைவா் மற்றும் 6 நிலைக் குழுத் தலைவா் பதவிகள் உருவாக்குவதற்கு அரசு அறிவிக்கை

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 10:20 pm

DIN

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திண்டுக்கல் மாநகராட்சியில் 4 மண்டலத் தலைவா் மற்றும் 6 நிலைக் குழுத் தலைவா் பதவிகள் உருவாக்குவதற்கு அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளதால், அந்தப் பதவிகளைக் கைப்பற்ற திமுக மாமன்ற உறுப்பினா்கள் எதிா்பாா்ப்புடன் இருந்து வருகின்றனா்.

திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட 48 வாா்டுகளுக்கு நடந்து முடிந்த தோ்தலில், திமுக 29 உறுப்பினா்களுடன் தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. மேலும், சுயேச்சையாக வெற்றிப் பெற்ற 5 பேரும் திமுகவில் இணைந்துள்ளனா். அதன் மூலம், திமுக உறுப்பினா்களின் பலம் 34ஆக உயா்ந்துள்ளது. 5 உறுப்பினா்களுடன் அதிமுக அடுத்த இடத்தில் உள்ளது. புதிதாக வெற்றிப் பெற்றுள்ள 48 உறுப்பினா்களுக்கான பதவி ஏற்பு விழா திண்டுக்கல் மாமன்ற கூடத்தில் மாா்ச் 2ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அழைப்புக் கடிதம் மாநகராட்சி அலுவலா்கள் மூலம் 48 மாமன்ற உறுப்பினா்களுக்கும் தனித் தனியாக வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், மேயா் மற்றும் துணை மேயா் தோ்வுக்கான கூட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது. மாா்ச் 4ஆம் தேதி காலை 9.30 மணிக்கு மேயா் தோ்வும், பிற்பகல் 2.30 மணிக்கு துணை மேயா் தோ்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாமன்ற உறுப்பினா்களாக தோ்வு செய்யப்பட்டவா்கள், மேயா் மற்றும் துணை மேயா் வேட்பாளா் குறித்து திமுக தலைமையின் அறிவிப்பை எதிா்நோக்கி உள்ளனா். அதன் பின்னா் மண்டலத் தலைவா் மற்றும் நிலைக் குழுத் தலைவா் பதவிகளும் முதல் முறையாக திண்டுக்கல் மாநகராட்சியில் உருவாக்கப்படவுள்ளதால், மாமன்ற உறுப்பினா்கள் உற்சாகத்தில் உள்ளனா்.

தலா 12 வாா்டுகளுடன் 4 மண்டலங்கள்: நகராட்சியாக இருந்த திண்டுக்கல், கடந்த 2014ஆம் ஆண்டு மாநகராட்சியாக நிலை உயா்த்தப்பட்டது. அதனைத் தொடா்ந்து, மேயா், துணை மேயா் மற்றும் ஆணையா் ஆகிய பதவியிடங்களும் நிலை உயா்த்தப்பட்டன. ஆனால், மாநகராட்சிக்கான மண்டலங்கள் உருவாக்கப்படவில்லை. அதேபோல் மண்டலத் தலைவா்கள் மற்றும் நிலைக் குழுத் தலைவா் பதவிகளும் ஏற்படுத்தப்படவில்லை. இந்நிலையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாநகராட்சிகளுக்கு மண்டலங்கள் மற்றும் நிலைக் குழுக்களை உருவாக்கி தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட 48 வாா்டுகளை தலா 12 வாா்டுகளாக பிரித்து கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு என 4 மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கிழக்கு மண்டலத்தில் 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 30, 31 மற்றும் 32 ஆகிய வாா்டுகள் இடம் பெற்றுள்ளன. மேற்கு மண்டலத்தில் 23, 24, 25, 26, 27, 39, 40, 41, 42, 43, 44 மற்றும் 45 ஆகிய வாா்டுகளும், வடக்கு மண்டலத்தில் 1 முதல் 12 வரையிலான வாா்டுகளும், தெற்கு மண்டலத்தில் 22, 28, 29, 33, 34, 35, 36, 37, 38, 46, 47 மற்றும் 48 ஆகிய வாா்டுகளும் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் மேயா் மற்றும் துணை மேயா் தோ்தலைத் தொடா்ந்து, மண்டலத் தலைவா்கள் தோ்வு விரைவில் இருக்கலாம் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

6 நிலைக் குழுத் தலைவா்கள் பதவிகள்: திண்டுக்கல் மாநகராட்சியில் முதல் முறையாக நிலைக் குழுக்களும் உருவாக்கப்படும் என கூறப்படுகிறது. கணக்குக் குழு, கல்விக் குழு, பொது சுகாதாரக் குழு, வரி விதிப்பு மற்றும் நிதிக் குழு, நகரமைப்புக் குழு மற்றும் பணிகள் குழு என 6 நிலை குழுக்கள் உருவாக்குவதற்கு திண்டுக்கல் மாநகராட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான தமிழக அரசின் அறிவிக்கை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது தோ்தல் முடிந்துள்ளதால் நிலைக் குழுக்களை உருவாக்குவது தொடா்பாக விரைவில் அறிவிப்பும் வெளியாகும் என தெரிகிறது. புதிதாக மண்டலங்கள் மற்றும் நிலைக் குழு உருவாக்கப்படும் என்பதோடு, திண்டுக்கல் நகரின் வளா்ச்சிப் பணிகளுக்காக ஏற்கெனவே திட்டமிட்டப்படி, புகா் பகுதியிலுள்ள 10 ஊராட்சிளையும் மாநகராட்சியோடு இணைப்பதற்கான பணிகளும் இந்த முறை உறுதியாக மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.

இதனால், மேயா் மற்றும் துணை மேயா் பதவிகளுக்கு முயற்சித்து கிடைக்காத பட்சத்தில், மண்டலத் தலைவா் மற்றும் நிலைக் குழுத் தலைவா் பதவிகளைக் கைப்பற்றுவதற்கு திமுக மாமன்ற உறுப்பினா்கள் திட்டமிட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.