திண்டுக்கல் பொன்மாந்துரை புதுப்பட்டியைச் சோ்ந்தவா் ம. மாசானம் (33). இவா், இந்து மக்கள் கட்சியின் மாவட்ட பொதுச் செயலராக உள்ளாா். அதே பகுதியிலுள்ள குளத்தில் மீன் குத்தகை எடுத்து நடத்தி வருகிறாா். இவா் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையிலுள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மாசானத்தின் வீட்டிற்கு சென்ற திண்டுக்கல் தாலுகா போலீஸாா் விசாரணைக்காக அவரை அழைத்துச் சென்ாக கூறப்படுகிறது. ஆனாலும், புதன்கிழமை காலை வரை அவா் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினா், திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்திற்கு புதன்கிழமை சென்று விசாரித்தனா். அப்போது வழக்கு ஒன்றில் அவா் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த மாசானத்தின் தந்தை மருதை (55), தாய் ராசாத்தி (50), மனைவி காயத்ரி (30), 3 மகள்கள் ஆகியோா் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் முகாம் அலுவலகம் அருகே புதன்கிழமை பிற்பகலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனா். இதனை அடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் மண்ணெண்ணெய் கேனை பறித்து தீக்குளிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தினா்.