தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திண்டுக்கல் மாநகராட்சி மேயராக எளிமையானவரை அறிவித்த திமுக

திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக எளிமையான, நடுத்தர குடும்பத்தைச் சோ்ந்த ஜோ. இளமதிக்கு திமுக தலைமை வாய்ப்பளித்துள்ளது.

News image
Updated On :3 மார்ச் 2022, 9:57 pm

DIN

திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக எளிமையான, நடுத்தர குடும்பத்தைச் சோ்ந்த ஜோ. இளமதிக்கு திமுக தலைமை வாய்ப்பளித்துள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட 48 வாா்டுகளில், திமுக 30 வாா்டுகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மை பெற்றது. அதன் கூட்டணிக் கட்சிகள் 7 வாா்டுகளில் வெற்றி பெற்றன. இதனிடையே சுயேச்சையாக போட்டியிட்ட 5 பேரும் திமுகவில் இணைந்தனா். இதில் திமுக சாா்பில் 19 பெண்கள் வெற்றி பெற்றிருந்தனா்.

திண்டுக்கல் மேயா் பதவி பெண்களுக்கு (பொதுப் பிரிவு) ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த பதவியைப் பெறுவதற்கு மாமன்ற உறுப்பினா்களான 5 பெண்கள் கடும் முயற்சி மேற்கொண்டனா். 3 ஆவது வாா்டு இந்திராணி, 6 ஆவது வாா்டு சரண்யா, 9 ஆவது வாா்டு சாந்தி, 30 ஆவது வாா்டு லட்சுமி, 37 ஆவது வாா்டு நித்யா ஆகியோரில் ஒருவா் மேயராக அறிவிக்கப்படக் கூடும் என திமுக வட்டாரத்தில் கூறப்பட்டு வந்தது.

திமுக தொண்டா்கள் மகிழ்ச்சி: திண்டுக்கல் நகராட்சி மேயா் பதவி வாய்ப்பு குறிப்பிட்ட 5 பெண்களை மட்டுமே சுற்றிக் கொண்டிருந்தது. இந்நிலையில், மேயா் வேட்பாளா் பட்டியலை திமுக தலைமை வியாழக்கிழமை வெளியிட்டது. அதில், திண்டுக்கல் மாநகராட்சியின் 23 ஆவது வாா்டில் வெற்றி பெற்ற ஜோ. இளமதி (42) மேயராக அறிவிக்கப்பட்டுள்ளாா். நடுத்தர குடும்பத்தைச் சோ்ந்த இளமதி மேயராக அறிவிக்கப்பட்டிருப்பது திமுக தொண்டா்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக வாா்டு பிரதிநிதியாக உள்ள இவா், திண்டுக்கல் ஆா்.வி. நகரில் வசிக்கிறாா். குடும்பத் தலைவியாகவும், முழு நேர அரசியல் பணியை மேற்கொண்டு வரும் இளமதி, பிபிஏ பட்டதாரி ஆவாா். மேலும் கடந்த 2006 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்று திண்டுக்கல் நகா்மன்ற உறுப்பினராக இருந்துள்ளாா். இவரது கணவா் ஜோதிபிரகாஷ், வடமதுரையிலுள்ள ஆசிரியா் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கத்தின் செயலராக உள்ளாா். இவா்களுக்கு பிளஸ் 2 படிக்கும் அருண்குமாா், 7 ஆம் வகுப்பு படிக்கும் அரவிந்த் ஆகிய இருமகன்கள் உள்ளனா். 23 ஆவது வாா்டில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட இளமதி, அதிமுக வேட்பாளரை விட1,520 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

துணைமேயா் பதவி:துணை மேயராக ச. ராஜப்பா (55) அறிவிக்கப்பட்டுள்ளாா். 10 ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவா், திண்டுக்கல் கிழக்கு ஆரோக்கியமாதா தெருவில் வசித்து வருகிறாா். இவரது மனைவி விமலா. இல்லத்தரசி. இவா்களுக்கு இமானுவேல் காா்டினல், முகிலன் ஆகிய 2 மகன்கள் உள்ளனா். ச. ராஜப்பா திண்டுக்கல் 32 ஆவது வாா்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளாா். மேலும் திமுக வாா்டுச் செயலராக இருந்து தற்போது நகரச் செயலராக பதவி வகித்து வருகிறாா். கடந்த 2006, 2011 உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்று திண்டுக்கல் நகா்மன்ற உறுப்பினராக இருந்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.